போக்குவரத்துக் கழகங்களின் கடன்களை அரசே ஏற்க வேண்டும்: ராமதாஸ்

போக்குவரத்துக் கழகங்களின் கடன்களை அரசே ஏற்க வேண்டும்: ராமதாஸ்
Updated on
2 min read

மின்சார வாரியத்தின் கடனை அரசே ஏற்றுக்கொண்டதைப் போன்று போக்குவரத்துக் கழகங்களின் கடன்களையும் நிபந்தனையின்றி, குறைந்த வட்டியில் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்திற்கான ஓய்வூதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. இதனால் ஓய்வூதியம் பெறும் 48,000 குடும்பங்களும், குடும்ப ஓய்வூதியம் பெறும் 17,000 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 4 மாதங்களாகவே போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கப் படவில்லை. கடந்த மாதம் இரு தவணைகளில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த மாதம் 21 நாட்கள் ஆகியும் ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வூதிய நிதி அறக்கட்டளையிடம் போதிய நிதி இல்லாதது தான்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் 1998ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக ஓய்வூதிய நிதி அறக்கட்டளை என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களிடமிருந்து அவர்களது ஊதியத்தில் 12 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டு ஓய்வூதிய நிதி அறக்கட்டளையில் செலுத்தப்படும்.

அதேபோல், போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் பங்காகவும் 12% அறக்கட்டளையில் செலுத்தப்படும். தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது அவர்கள் செலுத்திய தொகை ஓய்வூதியப் பயனாக வழங்கப்படும். நிர்வாகத்தின் சார்பில் செலுத்தப்பட்ட தொகையிலிருந்து மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். இது தான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் முறையாகும்.

ஆனால், ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்கள் தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை ரூ.4000 கோடியை ஓய்வூதிய நிதி அறக்கட்டளையில் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன. இதுதான் இன்றைய நெருக்கடிக்கு காரணமாகும்.

ஓய்வூதிய நிதியை நிர்வகிப்பதிலும் பல குளறுபடிகள் நடந்துள்ளன. 1998-ஆம் ஆண்டு போக்குவரத்துக் கழக ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்பட்ட போது, அதை நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கு போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து ரூ.1400 கோடி நிதி வழங்கப்பட்டது. அதை நிரந்தர வைப்பீடாக வைத்திருந்தால் அதிலிருந்து மாதம் ரூ.25 கோடி வட்டி கிடைத்திருக்கும். அதைக் கொண்டு தடையின்றி ஓய்வூதியம் வழங்கியிருக்க முடியும். ஆனால், அதை செய்ய ஆட்சியாளர்கள் தவறி விட்டனர்.

அதுமட்டுமின்றி, ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிகள் உருவாக்கப்பட்ட போது, நிதி நெருக்கடி காரணமாக ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டால், ஓய்வூதியத்திற்கான நிதியை அரசும், போக்குவரத்துக் கழகங்களும் தான் ஏற்கவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன்படி இப்போது தமிழக அரசு தான் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவ்விதியைக் காரணம் காட்டி, அரசிடமிருந்து நிதி பெற்றுத் தரும்படி போக்குவரத்துத் துறை செயலாளருக்கு ஓய்வூதிய அறக்கட்டளை சார்பில் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்ட போதிலும், அரசிடமிருந்து நிதி பெற்றுத்தர போக்குவரத்து செயலர் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாதது போக்குவரத்துக் கழகங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளின் ஒரு துளி மட்டும் தான். ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்களை வழங்காதது, வருங்கால வைப்பு நிதி செலுத்தாதது, வாங்கிய கடனை செலுத்தாதது என ஏராளமான சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்துக் கழகங்களின் மொத்தக் கடன் தொகை மட்டும் ரூ.35,000 கோடியை தாண்டி விட்டதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.6 கோடி இழப்பு ஏற்படும் நிலையில் இந்தக் கடனை அவை அடைப்பதற்கு வாய்ப்பில்லை.

மற்றொருபுறம் போக்குவரத்துக் கழகங்களின் இந்த நிலைக்கு காரணம் ஊழல் தான். போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஆளும் தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படுகிறது. இதையும், அனைத்து நிலைகளிலும் நிலவும் ஊழல்களையும் தடுத்தாலே போக்குவத்துக் கழகங்கள் லாபத்தில் இயங்கத் தொடங்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

எனவே, மின்சார வாரியத்தின் கடனை அரசே ஏற்றுக்கொண்டதைப் போன்று போக்குவரத்துக் கழகங்களின் கடன்களையும் நிபந்தனையின்றி, குறைந்த வட்டியில் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆளும்கட்சி தலையீடின்றி, திறமையான, நேர்மையான அதிகாரிகளின் கைகளில் போக்குவரத்துக் கழகங்களை ஒப்படைப்பதன் மூலம் அவை லாபத்தில் இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு இம்மாத இறுதிக்குள் நிரந்தரத் தீர்வு காணப்படாவிட்டால் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பாமக போராட்டம் நடத்தும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in