Published : 07 Jun 2017 11:47 AM
Last Updated : 07 Jun 2017 11:47 AM

கத்தாரில் வாழும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்: ஜி.கே.வாசன்

கத்தார் மற்றும் அரபு நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக கத்தாரில் வாழும் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்

“ இந்தியர்கள் பல்வேறு உலக நாடுகளில் பணி புரிந்து வருகிறார்கள். குறிப்பாக கத்தார் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 1 இலட்சம் பேர் உள்பட 6.5 இலட்சம் இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். தற்போது கத்தார் நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, வேலை இல்லாத சூழலும் நிலவுகிறது. ஏற்கனவே கத்தார் நாட்டோடு நல்லுறவு கொண்டிருந்த பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா உட்பட சில வளைகுடா நாடுகள் தற்போது அந்நாட்டோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நல்லுறவை தொடரவில்லை.

முக்கியமாக கத்தார் நாடு பயங்கரவாதத்திற்கு ஆதராவான செயல்களில் ஈடுபடுவதாகவும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஈரானோடு நெருக்கமான உறவு கொண்டிருப்பதாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து போன்ற நாடுகள் கத்தாரோடு தூதரக மற்றும் வர்த்தகத் தொடர்பை துண்டித்துவிட்டது.

இச்சூழலில் இந்நாடுகளில் இருந்து கத்தார் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை. குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பால், கோதுமை, இறைச்சி போன்ற உணவுப்பொருட்கள் சுமார் 95 சதவீதத்திற்கு கத்தாருக்கு ஏற்றுமதியானது.

கத்தார் நாட்டோடு பல்வேறு நாடுகள் நல்லுறவை முறித்துக்கொண்ட சூழலில் தற்போது கத்தார் நாட்டில் அன்றாட, அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஈரான் நாட்டில் இருந்து தற்போது கத்தாருக்கு உணவுப்பொருட்கள் இறக்குமதியாவதாக கத்தார் நாடு தெரிவித்துள்ளது. இருப்பினும் கத்தார் நாட்டிற்கு தேவையான உணவுப்பொருட்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

இதனால் கத்தார் நாடு முழுவதும் ஆங்காங்கே பணிபுரிந்து வரும் இந்தியர்களுக்கு போதுமான உணவுபொருட்கள் உட்பட பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப்பெறாமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.

குறிப்பாக கத்தார் நாட்டின் தோஹா பகுதியில் தற்போது பெருமளவு உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்கு அதிக அளவில் பணிபுரிந்து வருகின்ற தமிழர்கள் பாதிப்படைகிறார்கள்.

மேலும் இந்தியாவில் இருந்து கத்தார் வழியாக பிற நாடுகளுக்கு செல்லும் விமானப் போக்குவரத்து நடைபெறாமல் தடைப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானப் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

எனவே மத்திய பா.ஜ.க. அரசு கத்தார் நாட்டோடு தொடர்பு கொண்டு அங்குள்ள இந்தியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைப்பதற்கு வழி வகைச்செய்ய வேண்டும்.

மேலும் கத்தார் நாட்டில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப விரும்பினால் அவர்களை பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் ” என்று வாசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x