Published : 03 Nov 2015 03:00 PM
Last Updated : 03 Nov 2015 03:00 PM

தீபாவளிக்காக 11,959 சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களில் இருந்து பிற இடங்களுக்கும் மொத்தம் 11,959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதேபோல், தீபாவளி முடிந்த பிறகு, மறு மார்க்கத்தில் 11,959 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்கள் தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த நான்கு ஆண்டுகளாக எனது உத்தரவின் பேரில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வந்துள்ளன. அதே போன்று இந்த ஆண்டும் தீபாவளித் திருநாளை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

கோயம்பேட்டிலிருந்து 4,271 பேருந்துகள்:

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 6.11.2015 அன்று 1,106 சிறப்புப் பேருந்துகள் ,7.11.2015 அன்று 1,146 சிறப்புப் பேருந்துகள், 8.11.2015 அன்று 825 சிறப்புப் பேருந்துகள், 9.11.2015 அன்று 1,194 சிறப்புப் பேருந்துகள் என 6.11.2015 முதல் 9.11.2015 வரை மொத்தம் 4,271 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

பிற ஊர்களில் இருந்து 7,688 பேருந்துகள்:

இது தவிர, மாநிலத்தின் முக்கிய ஊர்களிலிருந்து 6.11.2015 அன்று 1,554 சிறப்புப் பேருந்துகள், 7.11.2015 அன்று 1,717 சிறப்புப் பேருந்துகள், 8.11.2015 அன்று 1,822 சிறப்புப் பேருந்துகள், 9.11.2015 அன்று 2,595 சிறப்புப் பேருந்துகள் என 6.11.2015 முதல் 9.11.2015 வரை 7,688 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

மொத்தம் 11,959 சிறப்புப் பேருந்துகள்:

மொத்தத்தில் தீபாவளித் திருநாளை ஒட்டி, 6.11.2015 முதல் 9.11.2015 வரை 11,959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோன்று, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 10.11.2015 முதல் 16.11.2015 வரை இயக்கப்படும்.

சென்னையில் சிறப்பு மாநகரப் பேருந்துகள்:

மேலும், மேற்காணும் நாட்களில் சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கணிசமான அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இணையதளம் மூலம் முன்பதிவு:

கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது போல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

அதிக கட்டணம் குறித்து புகார்:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x