

காணாமல்போன நாகப்பட்டினம் மாவட்டம், ஆற்காட்டுத்துறை, மீனவர்கள் மூவரை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நாகப்பட்டினம் மாவட்டம், ஆற்காட்டுத்துறை, மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த ராமன், தியாகராஜன் மற்றும் கார்த்திக் ஆகிய 3 மீனவர்கள் ஆற்காட்டுத்துறையிலிருந்து IND-TN-06-MO-1817 என்ற பதிவு எண் கொண்ட மீன்பிடி வல்லத்தில் மீன்பிடிப்பிற்கு 3.11.2014 அன்று ஆற்காட்டுத்துறையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
4.11.2014 அன்று திரும்ப வேண்டிய இம்மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை.
மேற்படி காணாமல் போன மீனவர்களை விரைவில் மீட்பதற்காக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி மீனவர்களை வான் மற்றும் கடல் வழியாக தேடும் பணிகள் மீன்வளத்துறையினர், தமிழக கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கடலோரக் காவல் படையினரால் துவங்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.