

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்படுகிறார் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் அக்கட்சித் தலைவர் சரத்குமார் கூறியதாவது:
மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு உரிமைக்காகப் போராடியபோது அதை தட்டிக் கழிக்காமல் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசிடம் அனுமதி பெற்று, ஜல்லிக்கட்டு நடத்த சட்டமாக்கி கொடுத்தார். ஆந்திர மாநில முதல்வரை சந்தித்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சியின் ஆதரவு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
கட்சியை பலப்படுத்த பத்து அம்ச திட்டங்களை வைத்துள்ளோம். வீட்டுக்கு ஒரு விவசாயி உருவாக வேண்டும். கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வதைத் தவிர்த்து நகர் மக்கள் கிராமங்கள் பக்கமும் தங்கள் பார்வையை செலுத்த வேண்டும்.
சமச்சீர் கல்வி முறை சிறந்ததா என ஆராய வேண்டும். நடிகர் சங்கத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஒருமித்த கருத்து உருவானால் நல்லது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சினிமா தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது என்றார்.