

திருப்பூர் மாநகராட்சி 52-வது வார்டில் காய்ச்சலுக்கு பெண் குழந்தை உயிரிழந்ததை அடுத்து, சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கருப்பகவுண்டன்புதூர் சாலையில் பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
திருப்பூர் - பல்லடம் சாலை தமிழ்நாடு திரையரங்கம் எதிரே கருப்பகவுண்டன்புதூர் சாலையில் உள்ளது மண்ணாங்காடு. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆனால், எங்களுக்கு முறையான சாலை, குடிநீர், சாக்கடை வடிகால் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
மஞ்சள் நிறத்திலான குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பன்றிகளும் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. எங்கள் குடியிருப்பில் வசிக்கும் சுந்தர், பிரியா தம்பதிக்கு மூன்றரை வயதில் அஸ்விதா, அஸ்ருதா என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
கடந்த தில நாட்களுக்கு முன்பு, குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் அஸ்விதா உயிரிழந்தார்.
மகள் உயிரிழந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு அக்குடும்பத்தினர் சென்றுவிட்டனர். குழந்தை உயிரிழந்ததற்கு, மண்ணாங்காடு பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடுதான் காரணம் என்று கூறினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வீரபாண்டி போலீஸார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மாநகராட்சி நிர்வாகம் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மண்ணாங்காடு பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சுற்றித்திரியும் பன்றிகளைப் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. குப்பை, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். குறுகிய கால இடைவெளியில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அலுவலர்கள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.