அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்: வைகோ

அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்: வைகோ
Updated on
1 min read

பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க முன்வரவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான விவசாயிகள் பெருத்த நட்டம் அடைந்துள்ளனர். தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள வறட்சி நிவாரணப் பலன்கள் 2 ஹெக்டேருக்குக் (5 ஏக்கர்) கீழ் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

ஆனால் நாடு முழுவதும் 2 ஹெக்டேருக்கு கூடுதலாக உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளும் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அவர்கள் நிலங்களில் உள்ள பயிர்கள் கருகியதாலும், பருவ மழை பொய்த்ததாலும், கிணறுகளில் தண்ணீர் இல்லாததாலும் முழுமையாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே கடன் சுமையால் அவர்கள் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள். கடன் தள்ளுபடியும், சிறு குறு விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. எனவே லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் வாழ வழியின்றி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வாடி வதங்குகின்றனர்.

எனவே தமிழக முதல்வர் இரண்டு ஹெக்டேர் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி, எந்தெந்த இடங்களில் எல்லாம் விவசாயப் பயிர்கள் கருகி, அறுவடைக்கு வழியின்றி பெருத்த நட்டத்துக்கு ஆளாகி உள்ள இடங்களை போர்க்கால வேகத்தில் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க முன்வரவேண்டும்'' என வைகோ கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in