புதுவண்ணாரப்பேட்டையில் மாணவியை கடத்த முயற்சி

புதுவண்ணாரப்பேட்டையில் மாணவியை கடத்த முயற்சி
Updated on
1 min read

சென்னை தண்டையார் பேட்டை கார்ப்பரேஷன் காலனியை சேர்ந்தவர் மீர்பகது (35). தனியார் நிறுவன காவலாளி. இவரது மகள் சோனியா (14). புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு செல்ல தண்டையார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் சோனியா காத்திருந்தார். நீண்ட நேரம் பஸ் வராததால், அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் ஏறினார். ஏற்கெனவே ஆட்டோ வில் ஒரு இளைஞரும், ஒரு பெண்ணும் இருந்தனர். தண்டையார்பேட்டை பணிமனை வந்ததும் அதிலிருந்த பெண் இறங்கிவிட்டார்.

இப்போது இளைஞரும், சோனியாவும் மட்டுமே ஆட்டோவில் பின் இருக்கையில் இருந்தனர். ஆட்டோ சிறிது தூரம் சென்ற நிலையில், ஆட்டோ திடீரென திரும்பி வேறு வழியாக சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த சோனியா சத்தம் போட்டுள்ளார். உடனே ஆட்டோவில் இருந்த இளைஞர் சோனியாவின் வாயை பொத்த, ஆட்டோ மின்னல் வேகத்தில் சென்றது. தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை அருகே வந்தபோது, போக்குவரத்து நெரிசல் இருந்ததால் ஆட்டோ நின்றது.

அப்போது மற்ற வாகன ஓட்டி கள் ஆட்டோவில் சோனியாவின் வாயை பொத்தியபடி இளைஞர் இருப்பதை பார்த்து விவரம் கேட்க, அந்த இளைஞர் கையை எடுத்திருக்கிறார்.

உடனே சோனியா ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். ஆட்டோ ஓட்டுநரும் இளைஞரும் ஆட்டோ வுடன் தப்பிச் சென்றனர். பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. வீட்டுக்கு சென்ற சோனியா, பெற்றோரிடம் தன்னை 2 பேர் ஆட்டோவில் கடத்த முயன்றதைக் கூறினார். புகாரின்பேரில் மாணவியை கடத்த முயன்ற 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in