

அங்கன்வாடியில் இருந்து தொடக்கப்பள்ளிக்குச் செல்லும் 2.50 லட்சம் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா தெரிவித்தார்.
இதுகுறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 54,499 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அவற்றின் மூலம் 43 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 5 வயது வரை இணை உணவு வழங்கப்படுகிறது. தவிர, கற்கும் திறன் போன்ற பல்வேறு பயிற்சிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த முறை 5 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதாவது அங்கன்வாடி மையத்தில் இருந்து தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு சேருவதற்கான மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன்படி, தமிழகம் முழுவதும் 2.50 லட்சம் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனை தலைமைச் செயலகத்தில் முதல்வர் வழங்க உள்ளார். இதற்கான அனுமதி கடிதம் முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது.
பிற மாவட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மூலம் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 7 ஆயிரம் குழந்தைகளுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
காது கேளாத குழந்தைகளை மிக எளிதில், மிக விரைவில் கண்டறிவதற்கான மையம் (ஏர்லி இன்டர்வென்சன் சென்டர்) 15 மாவட் டத்தில் ஏற்படுத்தி, இதில் 5 ஆயி ரம் குழந்தைகள் கண்டறியப்பட் டுள்ளனர் என்றார்.