

ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற நினைப்பவர்கள் திமுகவை விமர்சிப்பதா என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தண்டாலம்மன் கோயில் தூர் வாரும் பணிகளை இன்று ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''தூர் வாரும் பணிகளை ஆளும்கட்சிதான் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்களின் கவனம் முழுவதும் உட்கட்சி பிரச்சினைகளை எதிர்கொள்வதிலேயே உள்ளது.
ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற நினைப்பவர்கள் திமுகவின் மக்கள் நலப் பணிகளை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மக்களின் பிரச்சினையை தீர்க்க திமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
எந்த பதவியிலும் இல்லாத பன்னீர்செல்வத்தை சந்தித்த பிரதமர், அனைத்துக் கட்சி கூட்டத்தின் தீர்மானத்தை எடுத்து சொல்ல தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக நான் அனுமதி கோரியும் எனக்கு நேரம் ஒதுக்கவில்லை. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளை சந்திக்கவும் பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை'' என்று ஸ்டாலின் கூறினார்.