

அண்ணா நகரில் வருமான வரித்துறை அதிகாரியின் முகம் மற்றும் உடலில் ஆசிட் ஊற்றிவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்தவர் மோஹித் பதாக்(24). ஹாக்கி தேசிய அணியில் இடம் பெற்ற வீரர். இதனால் விளையாட்டுப் பிரிவு இட ஒதுக்கீட்டில் இவருக்கு வருமான வரித்துறையில் வேலை கிடைத்தது. கடந்த ஒரு ஆண்டாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அண்ணா நகரில் உள்ள மத்திய வருவாய் அதிகாரிகள் குடியிருப்பில் தனது நண்பர்கள் 2 பேருடன் மோஹித் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க, உடனே மோஹித் சென்று கதவை திறந்தார். அப்போது கையில் ஆசிட் பாட்டிலுடன் தயாராக, ஹெல்மெட் அணிந்து வந்திருந்த ஒரு நபர், மோகித்தின் முகத்தில் ஆசிட் ஊற்றினார். மேலும் அவரது மார்பு மற்றும் வயிற்று பகுதிகளிலும் ஆசிட்டை கண் இமைக்கும் நேரத்தில் ஊற்றிவிட்டார். வலி தாங்க முடியாமல் அலறிய மோஹித், வீட்டுக்குள் ஓடினார். உடனே அந்த நபரும் பின்னால் சென்று மோஹித்தின் முதுகில் ஆசிட்டை ஊற்றினார்.
பின்னர் அந்த நபர், வெளியே வேகமாக ஓடிவந்து அங்கு மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த நண்பருடன் தப்பிச் சென்றுவிட்டார். மோஹித்தின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருப்பவர்கள் வருவதற்குள் இருவரும் தப்பிச் சென்று விட்டனர். வலியால் அலறி துடித்த மோஹித்தை அம்பத்தூர் அயப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோஹித் மீது 40 சதவீதம் தீக்காயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த திருமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் துறை அதிகாரிகளும் வந்து தடயங்களை சேகரித்தனர். தொழில் போட்டியா அல்லது வேறு ஏதும் பிரச்சினையில் ஆசிட் வீசினார்களா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இங்கு மொத்தம் 920 வீடுகள் உள்ளன. 24 காவலாளிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஆனால் மோஹித் வீடு அருகே இருக்கும் 2 கண்காணிப்பு கேமராக்களும் செயல்படவில்லை. எனவே குற்றவாளிகளின் உருவங்கள் அதில் பதியவில்லை. இதனால் வெளி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.