

தமிழகத்தில் நாய்க் கடித்து ஆண்டுக்கு 24 லட்சம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவதாகவும், இதில் ரேபிஸ் தாக்கியவர்கள் சத்தமில்லாமல் உயிரிழந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள் வரை நாய்க்கடி சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் 14 வயதுக்கு உட்பட்ட, தெருவில் விளையாடும் பள்ளிக் குழந்தைகள் எனக் கூறப்படுகிறது.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மட்டும் மாதந்தோறும் நாய்க்கடி சிகிச்சைக்கு வருவோரில் மாதம் 2 முதல் 3 பேர் ரேபிஸ் நோயால் இறக்கின்றனர். மாநகராட்சி, நகராட்சிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, அவற்றுக்கு கருத்தடை செய்வதற்கான நாய்கள் காப்பகம் மற்றும் கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. ஆனால், மாநக ராட்சி, நகராட்சியில் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான அன்றாட சுகாதாரப் பணிகளுக்கே முக்கியத் துவம் கொடுக்கப்படுகின்றன.
அதனால், தெரு நாய்கள் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் பெருகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மாநகராட்சி எல்லைக்குள் ரேபிஸ் கடித்து சமீபகாலத்தில் யாரும் இறக்கவில்லை. இறப்பவர்கள், மற்ற மாவட்டங்கள், கிராமப் புறங்களில் இருந்து சிகிச்சைக்கு வந்தவர்களாக இருக்கக் கூடும்.
தற்போது மண்டலம் வாரியாக ஒரு வார்டை தேர்வு செய்து, நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும் பணி நடக்கிறது. வெள்ளக்கல், செல்லூர் ஆகிய 2 இடங்களில் ஒரு நாளைக்கு 20 முதல் 40 நாய்கள் வரை கருத்தடை செய்யப்படுவதால் மதுரை நகரில் நாய்களின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக குறைத்துள்ளோம். அப்படியிருந்தும் தெரு நாய்கள், ஒரே நேரத்தில் குறைந்தபட்சம் 4 முதல் 12 குட்டிகள் வரை ஈனுவதால் அவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடில்லாமல் செல்கிறது’’ என்றார்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறும்போது, ‘‘சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம் உள்ளிட்ட பெரும் நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களில் கணக்கிடும்போது குறைந்தபட்சம் ஆண்டுக்கு 6 லட்சம் பேர் அரசு மருத்துவமனைகளுக்கு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளையும் சேர்த்தால் பாதிப்பு 24 லட்சம் பேராக உயருகிறது.
2015-ல் மட்டும் தமிழக சுகாதாரத் துறையின் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நாய்க்கடியின்போது போடக்கூடிய ரேபிஸ் தடுப்பு மருந்து, ஊசி வாங்குவதற்கு ரூ.12 கோடியே 63 லட்சத்து 63 ஆயிரத்து 140 செலவு செய்துள்ளது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 கோடிக்கு மேல் நாய்க்கடி மருந்துக்கு மட்டுமே செலவு செய்தாலும், தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கண்காணிக்கவும், தீவிரப்படுத்தவும் அரசு முயற்சிக்க வில்லை. அதனால், நாய்க் கடி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது’’ என்றார்.
ரேபிஸ் நாய்களை அடையாளம் காண்பது எப்படி?
மதுரை கால்நடை துறை இணை இயக்குநர் பாலசந்திரன் கூறும்போது, ‘‘ரேபிஸ் நோய் தாக்கப்பட்ட நாயின் உமிழ்நீரில் ரேபிஸ் கிருமி இருக்கும். ரேபிஸ் வைரஸ் ரத்தம் வழியாக செல்லாது. நரம்பு வழியாகத்தான் பெருகி மூளைக்கு செல்லும். மூளை புண்ணாகி எந்தவிதமான செயல்பாடுகளும் இருக்காது. கால்நடைகளுக்கு கடித்தால் கடித்த இடத்தில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு கடிபட்ட இடத்தில் நோய் எதிர்ப்பு மருந்தும், தடுப்பூசி மருந்தும் செலுத்த வேண்டும்.
ரேபிஸ் நாய்களின் வெறித்த பார்வை, நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும். தண்ணீர் குடிக்காமல் சாப்பிட முடியாமல் வயிறு ஓட்டிப்போய் இருக்கும். நோக்கமில்லாமல் வாழும் உயிரினமாக மாறி, எதிரே 5 ஆடுகள் நின்றால் எல்லா ஆடுகளையும் குரைக்காமலே அருகில் சென்று கடித்துவிடும். ஒரே இடத்தில் நிற்காமல் அங்கும் இங்குமாக ஓடும், எதுவுமில்லாத இடங்களை ஓடிஓடி கடிக்கும். அழைத்தாலும் திரும்பி பார்க்காது’’ என்றார்.