

போயஸ் கார்டனில் நேற்று பத்திரிகையாளர்களுக்கும் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக செய்தியாளர்கள் இருவர் மீதும் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவர் நேற்று (ஞாயிறுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் தனது ஆதரவாளர்களான ராஜா, பாலாஜி, காஞ்சிபுரம் மண்டல எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொறுப்பாளர் என்.ராமச்சந்திரன் ஆகியோருடன் தீபா போயஸ் தோட்டத்துக்குச் சென்றார். வீட்டில் வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தீபா தனது ஆதரவாளர்களுடன் போயஸ் தோட்டத்துக்கு வந்துள்ள தகவல் கிடைத்ததும் ஏராளமான பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி கேமராமேன்களும் அங்கு குவிந்தனர். ஒரு தொலைக்காட்சி கேமராமேன் போயஸ் தோட்ட வீட்டுக்குள் நுழைந்து தீபாவையும், அங்கிருந்தவர்களையும் படம் பிடித்தார். இதை வீட்டுக்குள் இருந்து பார்த்த சிலர், அந்த கேமராமேனையும், அவருடன் இருந்த நிருபரையும் சரமாரியாக தாக்கினர்.
பின்னர், அந்த கும்பல் தீபாவையும், அவரது ஆதரவாளர்களையும் போயஸ் தோட்ட வீட்டுக்குள் வைத்து பூட்டினர். சிறிது நேரம் கழித்து அவர்களை வீட்டுக்குள் இருந்து வெளியேற்றினர்.
போயஸ் தோட்டத்துக்குள் தொலைக்காட்சி கேமராமேன் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கு பதிவு:
இந்நிலையில், போயஸ் கார்டனில் அத்துமீறி வீடியோ எடுத்ததாகவும் அவதூறாக பேசிய மிரட்டியதாகவும் தொலைக்காட்சி நிருபர் சஞ்சீவி, ஒளிப்பதிவாளர் ராகவன் மீது தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தங்கையன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அதேபோல் தொலைக்காட்சி நிருபர் சஞ்சீவி அளித்த புகாரின் பேரிலும் அடையாளம் தெரியாத தனியார் நிறுவன பாதுகாவலர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.