

குறைந்து வரும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சென்னையை குளுமையாக வைத்துக் கொள்ளவும் மாடி தோட்டங்களை கட்டாயமாக்க மாநகராட்சி திட்டம் வைத்துள்ளது.
தேசிய வனக் கொள்கை 1988-ன்படி இந்தியாவின் 33% நிலம் வனப் பகுதியாக இருக்க வேண்டும். ஆனால் 25% நிலம் மட்டுமே வனப்பகுதியாக உள்ளது. சென்னையில் 10 சதவீதத்துக்கும் கீழான நிலப்பகுதியே மரங்களால் சூழப்பட்டுள்ளது. ஆனால் புதிதாக மரங்கள் நட சென்னையில் போதிய இடமில்லை.நகரமயமாக்கலின் விளைவாக
ஒவ்வொரு நாளும் சென்னையை நோக்கி பல ஆயிரம் பேர் வேலைக்காகவும் மேல் படிப்புக்காகவும் வந்து கொண்டிருக்கிறார்கள். அதிகரித்து வரும் மக்கள் தொகையும் கட்டிடங்களின் எண்ணிக்கையும், சென்னையை வெப்பமாக்கிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் புதிதாக மரங்களை நட சென்னையில் இடம் கண்டெடுப்பது பெரும் பாடாக உள்ளது.
எனவே கட்டிடங்களின் மாடிகளில் தோட்டங்கள் அமைப்பதை கட்டாயமாக்க மாநகராட்சி யோசித்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:
புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் விதிகளின்படி திறந்த வெளி நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்யப்படும். அவர்கள் மாடி தோட்டம் அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஆனால் ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டிட வளாகங்களில் போதிய மரங்கள் இல்லையென்றால் மாடிகளில் தோட்டங்கள் அமைப்பது, கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் ஜன்னல்கள் இல்லாத இடங்களில் படரும் கொடிகள் தொங்க விடுவது உள்ளிட்ட அம்சங்கள் கட்டாயமாக்கப்படும்.
இதனால் நகரம் குளுமையடைவதோடு கட்டிடமும் குளுமையாக இருக்கும். இதனால் மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டியின் பயன்பாடு குறைய வாய்ப்புள்ளது. அதனால் மின்சார பயன்பாடும் குறையும்.
எவ்வளவு பரப்பளவு கொண்ட கட்டிடத்துக்கு எத்தனை மரங்கள் வளர்க்க வேண்டும், அலுவலகங்களுக்கும் வீடுகளுக்கும் இந்த விதி எவ்வாறு மாறுபடும் என்பது குறித்து விரைவில் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் இது தேர்தலுக்கு பிறகு அமல்படுத்தப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.