கடலோர காவல்படையினர் தாக்கியதாக காரைக்கால் மீனவர்கள் குற்றச்சாட்டு

கடலோர காவல்படையினர் தாக்கியதாக காரைக்கால் மீனவர்கள் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மீன் பிடிக்கச் சென்றபோது, இந்திய கடலோர காவல் படையினர் தாக்கியதாக காரைக்கால் மாவட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதற்கு கடலோர காவல்படை மறுப்பு தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மேடு, கீழகாசாகுடிமேடு, கோட்டுச்சேரிமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளில் கடந்த மார்ச் 27-ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

கடந்த 29-ம் தேதி மாலை சர்வதேச கடல் எல்லையை ஒட்டிய பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர், மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மீனவர்களை அவர்கள் தாக்கியது டன், வலைகளைச் சேதப்படுத்திய தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3 படகுகளில் 27 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தனர். இதில், காரைக்கால்மேடு கிராமத்தைச் சேர்ந்த சந்திரநாதன்(27), ஞானசேகரன்(24), கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த சுசீந்தரன்(31), நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன்(40), சாமந்தான் பேட்டையைச் சேர்ந்த சரத்குமார்(23) ஆகிய 5 மீனவர்களுக்கு காயங்கள் இருந்தன. காயமடைந்த மீனவர்களை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த எங்களை, இந்திய கடலோர காவல்படையினர் திடீரென வந்து தாக்கினர். வலைகள், மீன்கள் உள்ளிட்ட பொருட்களைச் சேதப்படுத்தி, அடையாள அட்டைகள், அனுமதிச் சீட்டுகளையும் பறித்துச் சென்றனர். ஏற்கெனவே, இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களால் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் எங்களை, இந்திய கடலோர காவல்படையினரும் தாக்குவது வேதனையளிக்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் கேள்விக்குள்ளாகி உள்ளது. எனவே, கடலோர காவல்படையினர் மீது மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

கடலோர காவல்படை மறுப்பு

இதுகுறித்து இந்திய கடலோர காவல்படையின் காரைக்கால் மைய அதிகாரிகள் கூறியபோது, “சர்வதேச கடல் எல்லைக்கு மிக நெருக்கமாக மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களை எச்சரித்து, அறிவுறுத்தி திரும்பிச் செல்லுமாறு கூறினோம். அவர்களின் அடையாள அட்டைகளை வழக்கமான முறைப்படி சோதனை செய்தோம்.

அங்கேயே அவர்கள் தொடர்ந்து மீன் பிடித்தால், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட வாய்ப்பு இருந்ததால் மீனவர்களை காப்பாற்றும் விதமாகவே கடலோர காவல்படை செயல்பட்டது. மீனவர்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை. அவர்களது வலைகள், மீன்கள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in