Published : 28 Apr 2017 05:52 PM
Last Updated : 28 Apr 2017 05:52 PM

வறட்சி அல்ல; சொந்தக் காரணங்களே விவசாயிகள் தற்கொலைக்குக் காரணம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

விவசாயிகள் தற்கொலைக்கு வறட்சி காரணமல்ல, தனிப்பட்ட காரணங்களால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள் ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி நிலவு கிறது. இதன்காரணமாக கடந்த சில மாதங்களில் 106-க்கும் மேற்பட்ட விவசா யிகள் தற்கொலை செய்து கொண்டிருப்ப தாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதைத் தொடர்ந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த மார்ச் 14-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் 40 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்றது.

நதிகளை இணைக்க வேண்டும், விவசாயி களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாள்தோறும் நூதன போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் தமிழக விவசாயிகளின் மீது திரும்பியது.

கடந்த 23-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று விவசா யிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். எனினும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 25 முதல் டெல்லியில் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக் கண்ணு அறிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இதனிடையே தமிழக விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தமிழ்நாடு மக்கள் வழக்காடு மையம் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 13-ம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியபோது, “தமிழக விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது மிகுந்த கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மாநில அரசு செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங் களுக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கன்னா உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் தற்கொலை தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். அதன்படி வறட்சியின் காரணமாக எந்த வொரு விவசாயியும் தற்கொலை செய்ய வில்லை. மாரடைப்பு, உடல்நலக் குறைவு, வயது முதுமை உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் மட்டுமே அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 82 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் இதுவரை ரூ.2.46 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வறட்சியை சமாளிக்க ரூ.39,565 கோடி நிதி வழங்குமாறு மத்திய அரசிடம் கடந்த ஜனவரியில் மனு அளித்துள்ளோம். ஆனால் வறட்சி நிவாரணமாக ரூ.1,748.28 கோடியை மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டில் வறட்சி ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1,377 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதே போல கடந்த 2015-16-ம் ஆண்டு வெள்ளத் தில் பாதிக்கப்பட்ட 7.62 கோடி விவசாயி களுக்கு ரூ.407.57 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது.

பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்ட 3,48,233 விவசாயிகளுக்காக ரூ.1,840.79 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016-17-ம் நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 7,62,772 விவசாயிகளுக்கு ரூ.4,227.98 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சியை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் நலன்களில் அதிக அக்கறை கொண்டு செயல்படுகிறது.

இவ்வாறு தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x