

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடிக்கு மேல் உயர்த்தப்பட்டதற்கு கேரளம் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இடுக்கி மாவட்டத்தின் பீர்மேடு தொகுதி எம்எல்ஏ பிஜுமோல் தனது ஆதரவாளர்கள் மற்றும் கேரள பத்திரிகையாளர்களுடன், முல்லைப் பெரியாறு அணைக்குள் அத்துமீறி நுழைந்து படம் பிடித் தார்.
அவர்களைத் தடுத்த தமிழக பொதுப்பணித்துறை கம்பம் செயற் பொறியாளர் மாதவனை கீழே தள்ளிவிட்டு அணைப் பகுதிக்கும் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அணைப் பாதுகாப்பில் ஈடுபட்ட கேரள வனத்துறையினரும் இதைக் கண்டுகொள்ளாததால், அணையில் பணியாற்றும் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் கேரள தலைமைச் செயலர் (பொறுப்பு) நிவேதிதா பி.ஹரணுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 17-ம் தேதி பேபி அணைக்கு வந்த பீர்மேடு தொகுதி எம்எல்ஏ எந்த அனுமதியுமின்றி நுழைந்துள்ளார். அவரை அணை பாதுகாப்பில் இருந்த கேரள பாதுகாப்புத் துறையினரும் தடுக்கவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு இரு மாநில விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிற்பாதுகாப்புப் படை பாதுகாப்பு வேண்டுமென்று கோரியது.
அப்போது கேரள அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி, கேரள போலீஸாரும், வனத்துறையினரும் முல்லைப் பெரியாறு பாதுகாப்பில் ஈடுபட்டுள் ளனர். அணைக்கோ, அணையை நிர்வகிக்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படாது என உறுதியளிக் கிறோம் என்று கூறினார். அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றது.
ஆனால், தற்போது அந்த உத்தரவாதத்தை கேரளம் மீறியுள்ளது. கேரள எம்.எல்.ஏ. பத்திரிகையாளர்களுடன் அத்துமீறி அணைக்குள் நுழைந்து, தமிழக பொறியாளரைத் தாக்கியது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். இது கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை பகிரங்கமாக மீறுவதாக உள்ளது.
இந்த விஷயத்தில் கேரள அரசு தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அணையின் பாதுகாப்பு குறித்த பிரச்சினைக்காக உச்ச நீதிமன் றத்தை தமிழக அரசு நாட வேண்டியிருக்கும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ’கேரள எல்லையில், தமிழக அரசுக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு ஆகிய ஆணைகள் உள்ளன. இவற்றில் கேரள வனத் துறையினர்தான் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தமிழக அணைப் பகுதிகளுக்கு கேரள அரசு சரியான பாதுகாப்பு அளிக்காததால், பரம்பிக்குளம் மற்றும் முல்லைப் பெரியாறு அணைகளுக்கு மத்திய தொழிற் பாதுகாப்புப் படை பாதுகாப்பு கோரி, மத்திய நதி நீர் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தனர்.