

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஊதியூர் மலையில் தமிழர்களின் பண்பாட்டைச் சித்தரிக்கும் கலைப் பொக்கிஷங்களான புராதனச் சின்னங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. இதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால், அதிகாரிகள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
காங்கயம் வட்டம் ஊதியூரில் உள்ள கொங்கணகிரி மலை மிகவும் பிரசித்தி பெற்றது. ஊதியூர் மலையில் கொங்கண சித்தரால் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் இங்குள்ளது. அருணகிரிநாதர் பாடிய பாடல்பெற்ற தலம் இது. இத்தனை பெருமைகள் சூழ்ந்த இம்மலையைச் சுற்றி வரலாற்றுப் பெருமைகள் தாங்கிய பல்வேறு தொல்லியல் சிற்பங்கள் உள்ளன.
தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியவற்றை விளக்கும் பல்வேறு சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் தற்போது மலையடிவாரத்தில் கவனிப்பாரற்று காணப்படுவது பெரும் வேதனை. கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளுக்கு இடது புறத்தில் இயற்கையாகவே தோன்றிய சுனையில் இருந்தும் இன்று வரை குளிர்ந்த நீர் கசிந்து கொண்டே இருக்கிறது. அந்த சுனையைப் பயன்படுத்தும் வகையில், அதன் அருகில் மனிதர்கள் நின்று தண்ணீர் எடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட கற்பலகையும் இன்றளவும் சிதைவடையாமல் இருக்கிறது.
தமிழினத்தின் பெருமைமிகு வரலாற்றைக் கொண்ட சோழர் காலத்திய 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி சிற்பங்களும், நாக சிற்பங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கின்றன. சிற்பக் கலையில் என்றென்றும் தலை நிமிர்ந்திருக்கும் சோழர் கால சிற்பங்கள் கேட்பாரற்று வனாந்தரத்தில் கிடக்கின்றன.
மூதாதையர்கள், தங்கள் தெய்வங்களை இந்த மலைப் பாறையில் சிறு உளி கொண்டு செதுக்கி வழிபட்டு வந்துள்ளனர். இவற்றின் அருகே ஒரு பழைய மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் கட்டுவதற்கு கற்கள் வழங்கியது குறித்த விவரம் தாங்கிய 18-19 நூற்றாண்டு கல்வெட்டு மண்ணில் புதைந்து சிதைந்து போகிறது.
இவற்றைச் சுற்றி வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்பது அப் பகுதியினரின் பிரதான கோரிக்கை.
ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறை அதன் வரலாற்றுப் படிமங்கள் மூலமாகவே அறியமுடியும். அப்படி போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒரு தமிழின வரலாற்றுப் படிமம் ஊதியூர் மலையில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அதை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.