

வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன். இந்நிறுவனம் சார்பில் பல திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், "வேந்தர் மூவிஸ் மதன் 5 பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை தன்னுடைய லெட்டர் பேடில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த கடிதத்தில் 'காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்' என்று குறிப் பிட்டுள்ளார். கடிதத்தை எழுதி வைத்துவிட்டு சென்ற மதன் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் மதனை கண்டு பிடிக்கக்கோரி அவரது மனைவி சுமலதா, தாயார் தங்கம் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் நேற்று முன்தினம் புகார் மனு கொடுத்தனர். இன்னொரு மனைவி சிந்து என்பவரும் மதனை கண்டுபிடிக்கக்கோரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று ஏராளமானவர்கள் வந்து வேந்தர் மூவிஸ் மதன் மீது புகார் மனு கொடுத்தனர். தெலங்கானா பகுதியை சேர்ந்த மகேஷ் மருத் துவ மேற்படிப்புக்காக ரூ.1.25 கோடியை மதனிடம் கொடுத்ததாக வும், கோவையை சேர்ந்த டாக்டர் சகுந்தலா ரூ.60 லட்சம், ஜெயச் சந்திரன் என்பவர் ரூ.63 லட்சம், மதுரையை சேர்ந்த பாஸ்கர் ரூ.25 லட்சம் கொடுத்ததாக புகாரில் தெரிவித்து உள்ளனர். மேலும், ஆடிட்டர் வெங்கடேசன், சேதுபதி, பாண்டியன் உட்பட மொத்தம் 47 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் கொடுத்துள்ளனர்.
‘காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி வேந்தர் மூவிஸ் மதன் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார்' என்று அனைவரும் புகாரில் தெரிவித்து உள்ளனர். மேலும், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கிஷோர் என்பவர் கொடுத்த புகாரில், ‘வேந்தர் மூவிஸ் மதன் மருத்துவ சீட் வாங்கி தருவதாக ரூ.2 கோடி வாங்கி ஏமாற்றிவிட்டார்' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேந்தர் மூவீஸ் மதன் காணாமல் போனது குறித்து விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மதனின் மனைவி சுமலதா சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின்பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.