Last Updated : 11 May, 2015 08:39 AM

 

Published : 11 May 2015 08:39 AM
Last Updated : 11 May 2015 08:39 AM

பொதுப்பணித் துறையில் முற்றுகிறது ஒப்பந்ததாரர் - பொறியாளர்கள் மோதல்

பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் இடையில் மோதல் மேலும் முற்றுகிறது.

பொதுப்பணித் துறையில் ஒப்பந்தம் எடுத்து கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சங்கம் சார்பில் கடந்த 4-ம் தேதி சென்னையில் பல இடங்களில் ‘ரமணா பட பாணி யில்... பொதுப்பணித் துறை யில் மாபெரும் ஊழல் செய்த அதிகாரிகள் யார்?...’ என்ற வாசகங்கள் அடங்கிய பேனர் களை வைத்தனர். இதுதவிர, ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் பொறியாளர் ஒருவர் ரூ.90 ஆயிரம் கமிஷன் தொகை தொடர்பாக பேசிய உரையாடல் ‘வாட்ஸ் அப்’பில் வெளியானது.

மேலும், ஊழல் அதிகாரிகள் எனக் கூறி 10 பேர் கொண்ட பட்டியலை நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் வழங்கினர். இவை யாவும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் பொதுப்பணித் துறை பொறியாளர் சங்கம் மற்றும் உதவிப் பொறியாளர்கள் சங்கங்களின் அவசர தலைமைச் சங்க செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கம் கடந்த சில தினங்களாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் ஊடகங்களில் பரப்பி பொதுப்பணித் துறைக் கும், பொதுப்பணித் துறை பொறி யாளர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதுடன் தமிழக அரசின் நற்பெயரை சீர்குலைக் கும் வகையில் செயல்படுகிறது. இச்செயலை தமிழ்நாடு பொதுப் பணித் துறை பொறியாளர் சங்கம் மற்றும் உதவிப் பொறியாளர் சங்கம் வன்மையாக கண்டிக் கிறது. துறையின் பொறியாளர் கள் தவறு செய்தது உண்மை யாக இருக்குமானால் விதிமுறை களின்படி அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க சங்கம் ஏகமன தாக ஒத்துழைக்கும்” எனக் கூறப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சங்க தலைவர் கே.மோகன்ராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஒப்பந்ததாரர்கள் சங்கத்தில் 150 பேர் உள்ளனர். அவர்களில் 7, 8 பேர்தான் பிரச்சினை செய்கின்றனர். அவர்கள் அவசர வேலைகளை செய்வதில்லை. அவர்களது பிரதான பிரச்சினையே ‘‘நாமினேஷன்’தான். அதாவது தலைமைச் செயலகம், அரசு மருத்துவமனை, உயர் நீதிமன்றம் போன்ற பகுதிகள், முதல்வர், அமைச்சர் மற்றும் நீதிபதிகள் வீடுகள் போன்றவற்றில் குடிநீர், கழிவுநீர் தொடர்பான அவசர பணிகள் மேற்கொள்வதற்கு டெண் டர்விடாமல் ஓர் ஒப்பந்ததாரரை அழைத்து (நாமினேட் செய்து) பணி வழங்குவது. இதற்கு அதிகபட்ச ஒதுக்கீட்டு தொகை ரூ.3 லட்சம் மட்டுமே. 2007-ல் அரசு வெளியிட்ட அரசாணையின்படி அவசரப் பணிகளுக்கு நாமி னேஷன் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அவர்கள் பிரதான கோரிக்கையாக உள்ளது.

இவர்கள் எந்த புகாரையும் இதற்கு முன் தெரிவிக்கவில்லை. இவர்கள் எந்த வேலையையும் ஒழுங்காக செய்வதில்லை. கட்டடத் தின் 2, 3 மற்றும் 4-வது தளங்கள் என்றால் தளவாட பொருட்களை அந்த தளங்களுக்கு கொண்டு செல்வதில் செலவு அதிகமாகும். லாபம் குறையும் என்பதால், தரைத்தளத்தில் பணி இருந்தால் மட்டும்தான் செய்வார்கள். கழிவுநீர் குழாய் சீரமைத்தல், தண்ணீர் தொட்டி கசிவு போன்ற பணிகள் கொடுக்கக் கூடாது. பெயின்ட்டிங் பணி எடுத்தால், குறைந்த விலையில் உள்ளூர் தயாரிப்பை வாங்கி, அதை தரமான பெயின்ட் நிறுவன டப்பாவில் ஊற்றி அடிப்பார்கள். இதையெல்லாம் கேட்டால் எங்கள் மீது ஊழல் புகார் அளிக்கின்றனர்.

தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பொறியாளர்கள் உள்ளோம். எங்களுக்கான நடைமுறைகள் உள்ளன. நாங்கள் எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளோம். தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில் அந்த ஒப்பந்ததாரர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.

45 சதவீதம் கமிஷன் கேட்கப் படுவதாக கூறுவது முழுப் பொய். ஒப்பந்ததாரர் கிருஷ்ண மூர்த்திக்கும் பொறியாளருக்கும் என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை. அந்த பொறியாளரிடம் விளக்கம் கேட்க முயற்சித்தபோது அவர் கைபேசியை அணைத்து வைத்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் குணமணி கூறியதாவது:

இந்த பிரச்சினை குறித்து துறை பொறியாளர்கள் சங்க பொதுச் செயலரிடம் கூறினோம். அவர் சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் பலமுறை பேசியுள்ளார். இது தொடர்பாக சங்கத் தலைவர் மோகன்ராஜிடம் கூறியபோது அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அவர் ஒதுங்கிவிட்டார்.

திசை திருப்பும் செயல்

4 அல்லது 5 ஒப்பந்த தாரர்கள்தான் பிரச்சினை செய்வ தாக அதிகாரிகள் கூறுவது திசை திருப்பும் செயல். சில அதிகாரிகள் தங்களுக்கு தெரிந்த ஒப்பந்ததாரர்களை அழைத்து அவர்களை மிரட்டி எங்களுக்கு எதிராக பேச வைக்க முயற்சித்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x