ஏ.கே.47 துப்பாக்கிக்கு நிகரான ‘அசால்ட் ரைபிள்’ திருச்சியில் தயாரானது; சத்தீஸ்கர் மாநில போலீஸாருக்கு வழங்கல்

ஏ.கே.47 துப்பாக்கிக்கு நிகரான ‘அசால்ட் ரைபிள்’ திருச்சியில் தயாரானது; சத்தீஸ்கர் மாநில போலீஸாருக்கு வழங்கல்
Updated on
1 min read

திருச்சி நவல்பட்டு பகுதியில் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘அசால்ட் ரைபிள்’ துப்பாக்கிகள் சத்தீஸ்கர் மாநில போலீஸாருக்கு நேற்று வழங்கப்பட்டன.

தீவிரவாதிகள், மாவோயிஸ்டு கள் உள்ளிட்டோரை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏ.கே. 47 ரக துப்பாக்கி வழங்கப்பட்டு, அதனை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவி லேயே மேம்படுத்தப்பட்ட 7.62 X 39 எம்எம் ‘அசால்ட் ரைபிள்’ என்ற புதிய ரக துப்பாக்கியை தயாரிக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் தொடங்கப்பட்டது.

இந்த துப்பாக்கியில் நிலையான, பக்கவாட்டில் மடிக்கப்பட்ட மற்றும் கீழாக மடிக்கப்பட்ட என மூன்று ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கியின் மூலம் சிங்கிள் ஷாட், ஆட்டோமெட்டிக் ஆகிய முறையில் சுட முடியும். ஆட்டோமெட்டிக் முறையில் ஒரு நிமிடத்தில் 600 ரவுண்டுகள் 500 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்க முடியும். இந்த ரக துப்பாக்கிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கு இணையான செயல்பாட்டைக் கொண்டிருக்கின்றன.

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப் படும் ‘அசால்ட் ரைபிள்’ ரக துப்பாக்கிகளை கொள்முதல் செய்துகொள்ள சில மாநில காவல்துறை சார்பில் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து துப்பாக்கிகளை அதிக அளவில் தயாரிப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை மேற்கொண்டு வருகிறது.

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் நேற்று நடைபெற்ற படைக்கலத் தொழிற்சாலை தினத்தில், இங்கு தயாரிக்கப்பட்ட ‘அசால்ட் ரைபிள்’ துப்பாக்கிகள் சத்தீஸ்கர் மாநில காவல்துறைக்கு வழங்கப்பட்டன.

விரைவில் இந்த ரக துப்பாக்கிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஏ.கே.47 துப்பாக்கிகளுக்கு மாற்றாக காவல்துறை, ராணுவம், துணை ராணுவம் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தப்படும் என திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் இந்த ரக துப்பாக்கிகள் ஏ.கே.47 துப்பாக்கிகளுக்கு மாற்றாக காவல்துறை, ராணுவம், துணை ராணுவம் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தப்படும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in