

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வெற்றிகரமாக செயல்படுவார் என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா கூறினார்.
ரஜினியை சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள அவரது இல்லத்தில் நக்மா இன்று சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சந்திப்பு நீடித்தது.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் நக்மா கூறியதாவது:
''ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது என்பது அவரது தனிப்பட்ட முடிவு. நான் அரசியல்வாதியாக, நடிகையாக இருக்கிறேன். நிறைய மனிதர்களை, பிரபலங்களை சந்திக்கிறேன். ரஜினிகாந்த் என் நண்பர் என்பதால் நட்பு ரீதியாக சந்தித்தேன். இந்த சந்திப்பில் அரசியல் திட்டம் எதுவும் இல்லை.
ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நிறைய பேர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதே எனது விருப்பம். அவர் அரசியலுக்கு வந்தால் வெற்றிகரமாக செயல்படுவார்'' என்றார்.
பீட்டர் அல்போன்ஸ் கருத்து
காங்கிரஸ் முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘அவர்கள் இருவரும் ஒரே துறையை சேர்ந்தவர்கள். பல காலம் ஒன்றாக பழகியவர்கள். ஆகவே, மரியாதை நிமித்தமாக சந்திப்பதில் அரசியல் இருப்பதாக எண்ணுவது சரியில்லை. ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டியிட்டபோது, நட்புரீதியாக ரஜினியை சந்திக்க வைத்து, படம் எடுத்து போட்டு, ரஜினி பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கினர். ஆனால், எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை என ரஜினி கூறிவிட்டார். அதே போன்ற தவறான முன்னு தாரணத்தை காங்கிரஸ் உருவாக்க நினைக்காது. இந்க சந்திப்பு நட்பு ரீதியிலானதுதான்’’ என்றார்.