Published : 02 Feb 2014 05:53 PM
Last Updated : 02 Feb 2014 05:53 PM

திமுக எம்.பி. கனிமொழி மருத்துவமனையில் அனுமதி

திமு.க தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.,யுமான கனிமொழி திடீர் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நல்ல நிலையில் உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், கனிமொழியின் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனிமொழி திடீர் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த சில தினங்களாக குடும்பப் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக செய்திகள் வெளியாகின.

மேலும் 2 ஜி வழக்கு தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாவதால் கனிமொழியும், திமுகவின் முக்கிய பிரமுகர்களும் தொடர் ஆலோசனை நடத்தி வந்ததால், கனிமொழி உடல்நலக்குறைவுக்கு ஆளானார் என்று தகவல்களும் பரவின.

இந்நிலையில் கனிமொழியின் உடல்நலம் குறித்து அவரது அலுவலக உதவியாளர்கள் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

அதில், ‘நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து பேசுவதற்காக கனிமொழி, கடந்த இரண்டு நாட்களாக இரவில் கண்விழித்து தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அதனால் அவர் உடல்நலக்குறைவுக்கு ஆளானார் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உடல்நிலை சீரானதாகவும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனிமொழியை, அவரது தந்தை, திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று பார்த்தார். கனிமொழிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் விவரங்கள் கேட்டறிந்து, கனிமொழியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இதற்கிடையில், கனிமொழி அனுமதிக்கப்பட்ட காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,’கனிமொழி எம்.பி., ஞாயிற்றுக்கிழமை காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடலளவிலும் மனதளவிலும் சோர்வாகக் காணப்பட்டார். அவருக்கு திரவ மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவர் நலமாக உள்ளார். விரைவில் மருத்துவமனையிலிருந்து உடல்நலத்துடன் வீடு திரும்புவார்’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x