

தமிழகத்தில் மீன்பிடித் தடைக் காலத்தை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல் லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் கொண்டு வரும் மீன் களுக்கு அதிக விலை கிடைத்து வருவதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவை கிழக்கு கடற்கரைக் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜுன் 15 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண் டபம், கீழக்கரை, வாலி நோக்கம், தொண்டி, எஸ்.பி பட்டிணம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கட லுக்கு செல்லவில்லை. கரை வலை மீனவர்களும், நாட்டுப்படகு மீனவர்களும் மட்டுமே மீன்பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 80 ரூபாய்க்கு விற்ற மத்தி மற்றும் சூடை மீன் தற்போது 100 ரூபாயாகவும், 400 ரூபாய்க்கு விற்ற வஞ்சீரம் 600 ரூபாயாகவும், 250 ரூபாய்க்கு விற்ற கிழங்கான் 300 ரூபாயாகவும், 200 ரூபாய்க்கு விற்ற ஊளி மீன் 250 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இது குறித்து தனுஷ்கோடி கரை வலை மீனவர்கள் கூறியதாவது: மீன்பிடித் தடைக்காலம் தற்போது அமலில் இருப்பதால் விசைப்படகு மற்றும் இழுவைப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்வதில்லை. இதனால் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது ராமேசுவரம் தீவுப் பகுதிகளில் கரை வலை மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்களைப் பிடித்து வருகின்றனர். நாட்டுப்படகு மீனவர்களின் மீன்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தனுஷ்கோடி கரைவலை மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் மட்டுமே உள்ளுர் மக்களின் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது. தொடர்ந்து மீன்கள் விலை உயர வாய்ப்புள் ளது என்றார்.