

ஐந்து மாநிலங்களின் தேர்தலில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும் தேர்தலில் மக்கள் நிச்சயம் மாற்றம் தருவார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் தேர்தல் முடிவில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், மேளதாளங்களுடன் தொண்டர்கள் கொண்டாடினார்கள். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ''உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஜனதா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்டிலும் ஆட்சியை பிடித்துள்ளது. மணிப்பூரை பொறுத்தவரை கட்சி பெரிய அளவில் இல்லாதிருந்தும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் ஏற்கனவே இருந்ததை விட, இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். தனிப்பட்ட முறையில் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
பிரதமர் மோடியின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மக்கள் இந்த வெற்றியின் மூலம் அங்கீகாரம் அளித்துள்ளார்கள். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. கருத்து கணிப்புகளையும் மீறி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்களின் மனநிலை மாறி இருக்கிறது.
தமிழகத்திலும் மக்கள் நிச்சயமாக மாற்றத்தை தருவார்கள். தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சியை பார்த்து வெறுத்துப் போய் இருக்கிறார்கள். பாஜகவுக்கு செல்வாக்கு பெருகி வருகிறது. தமிழகத்திலும் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்'' என்று தமிழிசை கூறினார்.