Published : 02 Nov 2014 11:05 AM
Last Updated : 02 Nov 2014 11:05 AM

ராமேசுவரத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: தூக்கு தண்டனை விவகாரத்தில் பிரதமர் தலையிட வலியுறுத்தல்

தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரியும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

2011 நவம்பர் 28-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லாங்நெட் ஆகிய ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்கள் மீது, இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தியதாக வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். அப்பாவி மீனவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதை உணர்ந்த தமிழக அரசு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம் 5 மீனவர்களுக்கான வழக்கை நடத்தி வந்தது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் பஸ், ரயில் மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மீனவர்களை மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் மீனவர்கள் மறியலைக் கைவிட்டனர். இதனால் வெள்ளிக்கிழமை ராமேசுவரத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

மீனவர்கள் வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை ராமேசுவரத்தில் மீனவர் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டத்தில் 13 மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி சனிக்கிழமை ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, ஏர்வாடி, வாலிநோக்கம், கன்னிராஜபுரம், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும், 2000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு களையும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலில் செலுத்தவில்லை.

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும், மீனவர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிடக்கோரியும் சனிக்கிழமை ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமை வகித்தார். தங்கச்சிமடம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசீலன், பாம்பன் ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக், ராமேசுவரம் நகராட்சி மன்றத் தலைவர் அர்ஜுனன், கிறிஸ்தவ பேராயர்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x