Published : 30 Oct 2013 11:57 AM
Last Updated : 30 Oct 2013 11:57 AM

விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு - உயர் நீதிமன்றம் உத்தரவு

பேருந்து விபத்தினால் காலை இழந்தவருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 8.3.2002 அன்று திருச்சி அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த அருள் என்ற 7 வயதுச் சிறுவன் பஸ்ஸிலிருந்து தவறி கீழே விழந்தார். அப்போது பஸ் சக்கரம் அவரது வலது காலில் ஏறியதால் காலையே அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து தனது மகனுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி அரியலூரில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் அருளின் தந்தை கருணாநிதி மனு தாக்கல் செய்தார்.

அவரது மனு மீது விசாரணை நடத்திய தீர்ப்பாயம், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.5 லட்சத்து 5 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டது.

எனினும் இதனை ஏற்காத போக்குவரத்துக் கழக நிர்வாகம் இழப்பீட்டுத் தொகையை குறைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதேபோல் இழப்பீட்டுத் தொகை போதுமானது அல்ல என்றும், அதனை உயர்த்தித் தர வேண்டும் என்றும் கோரி கருணாநிதி மற்றொரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, பாதிக்கப்பட்ட கருணாநிதியின் மனுவை ஏற்றுக் கொண்டு, இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். இதுகுறித்து நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்ததாவது:

விபத்தின் காரணமாக சிறுவனின் கால் அகற்றப்பட்டு அச்சிறுவனின் எதிர்காலமே முடங்கி விட்டது. சிறுவனின் கனவுகள் அனைத்தும் சுக்குநூறாக உடைந்து விட்டன. அந்த இழப்புகளை ஈடுகட்டும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கியாக வேண்டும். ஆகவே, போக்குவரத்துக் கழக நிர்வாகம் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையை 7.5 சதவீத வட்டியுடன் 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x