

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று ஆணை பிறப்பித்துள்ளது.
இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இந்தத் தீர்ப்பின்மீது மேல்முறையீடுக்குச் செல்லாமல் தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்ற ஆணையை செயல்படுத்தவேண்டும்.
ரூ.7000 கோடி விவசாயக் கடனை கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மாநில அரசே அந்தச் சுமையை ஏற்று தள்ளுபடி செய்தது என்பதை நினைவூட்டுகிறோம்.
கூட்டுறவுக் கடன்கள் மட்டுமன்றி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.