Last Updated : 04 Jan, 2017 11:44 AM

 

Published : 04 Jan 2017 11:44 AM
Last Updated : 04 Jan 2017 11:44 AM

நொய்யல் இன்று 20: 86 கிராமங்கள்; 28,596 விவசாயிகள்; ரூ.24.8 கோடி இழப்பீடு

பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்...

*

1997-ம் ஆண்டில் ஒரத்துப்பாளையம் அணையில் மீன்கள் செத்து மிதந்த காலகட்டம். முறைகேடாக இயங்கிய சாய ஆலைகள் மீது அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்தது.

‘ஆற்றில் தண்ணீரை சுத்திகரித்தே விடவேண்டும். அதில் வண்ணத் தன்மை இருக்கக் கூடாது; ஒரு லிட்டர் நீரில் உப்புத்தன்மை 2,100 பிபிஎம் அளவுக்குள் இருக்க வேண்டும். ஓராண்டுக்குள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இதற்காக மாநில, மத்திய அரசுகள் தலா 25 சதவீத மானியம் அளிக்கும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சுத்திகரிப்பு வசதி ஏற்படுத்தாத சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்படும்’ என்றெல்லாம் அறிவிப்புகள் வெளியாகின.

கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கம் போல, அணைக்கு மேல்பகுதியில் உள்ள ஒரத்துப்பாளையம், சின்னமுத்தூர் விவசாயிகளும் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தனர்.

2002-ல் சூழலியல் இழப்பீடு ஆணையத்தை நிறுவ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த ஆணையம் 2002 முதல் 2004 வரை அண்ணா பல்கலைக்கழக குழுவினர் மூலம் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட 86 கிராமங்களைச் சேர்ந்த 28,596 விவசாயிகளுக்கு ரூ.24.8 கோடி இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தது.

“இது குறைந்த இழப்பீடு. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளையும் கணக்கில் கொள்ளவில்லை. அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆய்வுக் குழுவினர் மேம்போக்காக ஆய்வு செய்துவிட்டனர்” என ஒரு தரப்பு விவசாயிகள் மீண்டும் முறையீடு செய்தனர்.

2 குழுக்கள்

2005-ல் தொடர்ந்த இந்த வழக்கில் விவசாயிகள் முன்வைத்த ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதனடிப்படையில் மாசுபாட்டை கணக்கிட சிவராமன், மோகன் தலைமையில் 2 குழுக்களை நீதிமன்றம் ஏற்படுத்தியது.

2006-ம் ஆண்டு சிவராமன் கமிட்டி, ஒரத்துப்பாளையம் அணையின் கீழ்ப்பகுதிவரை புதர்களை அகற்றி, கல் நட்டு அளவீடுகள் செய்தது. அணையின் துருப்பிடித்த மதகுகளை சீரமைத்தது. இதேபோல மோகன் கமிட்டி, சாயக்கழிவுகளை சுத்திகரிக்கும் மறுசுழற்சி நிலையங்களை அமைக்க, அளவீடு செய்ய பல்வேறு வழிவகைகளை செய்தது. அதைத் தொடர்ந்தும் நீதிமன்றம் மூலமாகவும், அரசுத் தரப்பிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

எனினும், நொய்யலில் சுத்திகரிக்கப்படாமலேயே சாயக்கழிவுகள் மீண்டும் விடப்படுவதாக விவசாயிகள் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதனால், 2011-ல் அனைத்து சாய ஆலைகளையும் மூடும்படி நீதிமன்றம் உத்திரவிட்டது. பூஜ்யமுறை டிஸ்சார்ஜ் அடிப்படையில் கழிவுநீரை சுத்திகரித்து விடும் ஆலைகளை மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தி, பிறகு அவற்றுக்கு உரிமம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

அதன் எதிரொலியாக 2011 ஜனவரி 28-ம் தேதி திருப்பூரில் 751 சாய ஆலைகள் மூடப்பட்டன. அதனால் பனியன் நகரம் மீண்டும் தொழில் நெருக்கடியில் சிக்கியது.

துணிகளுக்கு சாயமேற்ற மேற்கு வங்கம், குஜராத்துக்குச் சென்றனர் ஏற்றுமதியாளர்கள். தொடர்ந்து, 2012-ல் 380 சாய ஆலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. அவை, ரூ.1070 கோடியில் அமைக்கப்பட்ட 18 பொதுசுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைந்து, கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து, மீண்டும் பயன்படுத்துவதாக உறுதி அளித்ததால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது.

இதேபோல மேலும் 70 சாயப்பட்டறைகள், ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி மதிப்பில், தனி சுத்திரிப்பு நிலையம் அமைத்துக்கொண்டன. அவையும் கழிவுநீரை சுத்திகரித்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்துகிறது என்றுகூறி, தொடர்ந்து இயங்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

நீரை தேக்கக் கூடாது

இதற்கிடையில், “நீர்நிலை மாசு காரணமாக, எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரத்துப்பாளையம் அணையில் நீரை தேக்கக் கூடாது. அணைகளின் நீர்ப்போக்கிகள் திறந்தே இருக்க வேண்டும்” என்ற நீதிமன்ற ஆணையைப் பெற்றனர் விவசாயிகள்.

இதனால், தற்போது வரை நொய்யலாற்றில் திருப்பூரை அடுத்துள்ள மண்ணரை அணை தொடங்கி, எந்த அணையிலும் தண்ணீர் தேக்கப்படாமல், நேரே காவிரியில் கலந்துகொண்டிருக்கிறது நொய்யல். இந்த ஏற்பாடுகளால் பிரச்சினை ஓய்ந்ததா? அதுதான் இல்லை.

“இப்போதும் சாய நீர் சுத்திகரிக்கப்படாமலே நொய்யலில் விடப்படுகிறது” என்கிறார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள். அவர்களில் ஒரு பிரிவினர் “சாய நீரையே விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறாம். எனவே, நீர்நிலைகளில் தண்ணீரைத் தேக்க அனுமதியுங்கள். பாசனத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறோம்” என்கின்றனர். ஆனால், மற்றொரு பிரிவினரோ “இந்த நீர் நீண்டதூரத்திலிருந்து வருவதால், தனக்குத்தானே சுத்திகரித்துக் கொள்கிறது. அதைத் தேக்கினால் மீண்டும் விபரீதம் ஏற்படும். நிலம் பாழாகும். எனவே, நீரைத் தேக்கவே கூடாது” என்று எதிர்க்கின்றனர்.

இந்த விநோத முரண்பாடு, இப்பகுதி மக்களின் வாழ்நிலைக்கு மட்டுமின்றி, இயல்புத் தன்மைக்கும் தொந்தரவை ஏற்படுத்துகிறது. அதை இந்த கிராமங்களில் பயணிக்கும்போது அறிந்துகொள்ள முடிகிறது.

‘கண்ணுக்கு தெரியாத சூழல் பேரிடர்’

இந்தப் பிரச்சினைக்காக 2005-ல் நீதிமன்றத்தை நாடியவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் பிரத்விராஜ். இவர் முன்வைத்த ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, நொய்யல் மாசுபாட்டை கணக்கிட சிவராமன், மோகன் தலைமையில் 2 குழுக்களை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “2001-ல் நொய்யல் பிரச்சினையை ஆராய்ந்த நீரியல் நிபுணர் சிவனப்பனுடன் இணைந்து பணியாற்றினேன். அப்போது கிடைத்த அனுபவம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவத் தூண்டியது. எனவே, நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்குத் தொடர்ந்தேன். அப்போது திருப்பூர் சாயப்பட்டறைகள் தினமும் 115.2 மில்லியன் லிட்டர் நீரைப் பயன்படுத்தி, 9,000 டன் சாயக்கழிவை நொய்யலில் கொட்டின. நதியில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், அந்த நீரை குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படாத வகையில் மாசுபடுத்தியிருந்தன. நிலத்தடிநீர் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆற்று நீரில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் சிதைந்துவிட்டன.

நொய்யல் கரையோர கிராமங்களை ஒட்டியிருந்த மக்கள் ஆரோக்கியமாக இல்லை. 1990-ம் ஆண்டுக்கு முன் வரை சர்க்கரை, மாரடைப்பு, கிட்னி பாதிப்புகள் யாருக்கும் வந்ததேயில்லை. ஆனால், நாங்கள் நடத்திய ஆய்வில், ஒரத்துப்பாளையம் கே.பி.சென்னியப்பன் ஓராண்டுக்கு முன் குடல் புற்றுநோயால் இறந்தது தெரியவந்தது. அவர் 3 ஆண்டுகள் இங்குள்ள கிணற்று நீரையே பருகியுள்ளார். இதேபோல, நொய்யல் நீரைக் குடித்த பசுவின் பாலை அருந்தி, மற்றொருவரும் இந்த நோயால் இறந்ததும் தெரியவந்தது. மேலும், இந்த நீரால் மலட்டுத்தன்மை, உயர் ரத்த அழுத்தம், மூட்டு வலி, மனநோய் பாதிப்புகள் ஏற்பட்டதும் ஆய்வில் தெரியவந்தது.

இங்கு மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய், உணவுச் சங்கிலியே உருக்குலைந்து விட்டதும் மருத்துவ நிபுணர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. நொய்யலுக்கே உரிய ‘நீர் நாய்’ என்ற விலங்கு அழிந்துவிட்டது. அதுபோல, நன்னீர் விலங்குகள், நீர் பாம்புகளும் இறந்துள்ளன.

ஊத்துக்குளி பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையில் எந்த பறவைகளும் பறக்காததும் கண்டறியப்பட்டது. சுமார் 58,555 ஹெக்டேர் நிலங்களும், 28,596 விவசாயிகளும் பாதிக்கப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர், நீதிமன்ற உத்திரவின்பேரில் சுற்றுச்சூழல் இழப்பீட்டு ஆணையத்தை மத்திய அரசு அறிவித்தது.

தற்போது வரை விவசாயிகளுக்கு சாதகமான நிலையிலேயே நீதிமன்றத் தீர்ப்புகள் வந்துள்ளன. நொய்யல் மாசுவுக்கு எதிராக நிரந்தரத் தடை விதித்துவிட்டது உச்ச நீதிமன்றம். ‘ஜீரோ டிஸ்சார்ஜ் இல்லாமல் நீரை வெளியேற்றவே கூடாது. விவசாயிகளுக்கான இழப்பீடு குறித்த அனைத்து மனுக்களையும் 6 மாதங்களுக்குள் தேசிய பசுமைத் தீர்ப்பாய சென்னைக் கிளையில் முடித்துவைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. சாயப்பட்டறை உரிமையாளர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தியும், பெரும்பான்மை விவசாயிகளுக்கு தொகை கிடைக்கவில்லை. சுனாமி, பூகம்பத்தால் ஏற்படுவது மட்டும் பேரிடர் அல்ல. சாலை விபத்துகளில் ஓராண்டுக்கு 10 பேர் இறக்கிறார்கள். ஆனால், இதைவிட பெரிய பேரிடர் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளது. அது சூழல் பேரிடர். ஒரு நாளைக்கு 2 பேர் வீதம் சாவதும், மிருகங்கள், உயிரினங்கள், தாவரங்கள் அழிவதையும் பேரிடர் என்றே கருத வேண்டும்.

கிராமங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட இழப்பீடு

சூழலியல் இழப்பீட்டு ஆணைய உத்தரவின்பேரில் 2002 முதல் 2004 வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தியது அண்ணா பல்கலைக்கழக குழு. அந்தக் குழுவினர் இழப்பீட்டுக்காக பரிந்துரைத்த கிராமங்கள் விவரம்:

14 கிராமங்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.240-ம், 17 கிராமங்களுக்கு தலா ரூ.650-ம், 12 கிராமங்களுக்கு ரூ.1,090-ம், 26 கிராமங்களுக்கு ரூ.3,600-ம், 3 கிராமங்களுக்கு ரூ.4,860-ம், ஒரு கிராமத்துக்கு ரூ.6 ஆயிரமும், 7 கிராமங்களுக்கு ரூ.12 ஆயிரம், 6 கிராமங்களுக்கு ரூ.14,500 வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

கரூர் வட்டம்: ரூ.650 - வேட்டமங்கலம். ரூ.3,600 - காதப்பாறை, புஞ்சை தோட்டக்குறிச்சி, மின்னாம்புள்ளி, புஞ்சை புகழூர் தெற்கு, புஞ்சை புகழூர் வடக்கு, மண்மங்கலம், திருக்காடுதுறை, ஆத்தூர், பஞ்சமாதேவி, குப்பிச்சிபாளையம், புஞ்சை கடம்பன் குறிச்சி.

அரவக்குறிச்சி வட்டம்: ரூ.650 - கார்வழி, அஞ்சூர், ரூ.3600 - துக்காச்சி, தென்னிலை மேல்பாகம், அத்திப்பாளையம், குத்தம். ரூ.12000 - முன்னூர், தென்னிலை கீழ்பாகம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம்: ரூ.650 - எலக்கட்டாம்பாளையம், பாசுவார்பட்டி, எல்லைகிராமம், நஞ்சை பாலத்தொழுவு, வடுகன்பாளையம். ரூ.3600 - முரட்டுப்பாளையம், அக்கரகாரம் கத்தாங்கண்ணி. ரூ.14500 - ஒரத்துப்பாளையம், சர்க்கார் பெரியபாளையம், அணைப்பாளையம், கொடுமணல்.

ஈரோடு வட்டம்: ரூ.650 - வடிவுள்ள மங்கலம், கொல்லங்கோயில். ரூ.3600 - வேலம்பாளையம், மறவா பாளையம், குட்டப்பாளையம், கணபதி பாளையம், பழைய கோட்டை. ரூ.14500 - கத்தாங்கண்ணி, தம்மரெட்டிபாளையம். திருப்பூர் வட்டம்: ரூ.240 - தொட்டிபாளையம், செட்டிபாளையம், நல்லூர். ரூ.1090 - முதலிபாளையம், புதுப்பாளையம், காணியாம்பூண்டி, நெருப்பெரிச்சல், மங்கலம், மண்ணரை. ரூ.4,860 - ஆண்டிபாளையம், வீரபாண்டி.

கோவை: ரூ.240 - அனுப்பர்பாளையம், தென்னமநல்லூர், நாயக்கன்பாளையம், தேவராயபுரம், குனியமுத்தூர், வெள்ளலூர்.

கோவை நகரம்: ரூ.240 - சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், தெலுங்குபாளையம், சங்கனூர், சர்க்கார் சாமக்குளம், பேரூர் செட்டிபாளையம், பேரூர். ரூ.1090 - டவுன்ஹால், சிங்காநல்லூர், காளப்பட்டி, விளாங்குறிச்சி, கள்ளிப்பாளையம், சின்னவேடம்பட்டி. ரூ.4860 - சவுரிபாளையம். ரூ.6000 - கிருஷ்ணராயபுரம்.

- பயணிக்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x