

பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து வருவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேமுதிக மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் இல்லத் திருமணம் நேற்று நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
இடைத்தேர்தலைக் கண்டு பயப்பட வேண்டாம். நானும் பயப்பட மாட்டேன். ஊடகங்களும், பத்திரிகைகளும்தான் விஜயகாந்த் பயந்துவிட்டார் என்று எழுதுகின்றன. தேர்தலில் தோற்றாலும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.
பிரேமலதா பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையவும், மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்திலும் கூட்டணி அமைக்கப்பட்டது. தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கோடிக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்றுள்ளனர். பணம் செலவழிக்க வசதி இல்லாத வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். முள் பாதையில் பயணிப்பது சற்று கடினம். இறுதியில் வெற்றி அமைந்ததாகத்தான் வரலாறு இருந்திருக்கிறது. தமிழகத்தில் இளைஞர்கள் எழுச்சியுடன் தேமுதிக வெகு விரைவில் ஆட்சி அமைக்கும்.
சினிமாவில் கதாநாயகனை வில்லன் தொடர்ந்து அடித்து தாக்குவது போல் தெரியும். முடிவில் வில்லனை அடித்து தாக்கி கதாநாயகன் வெற்றி பெறுவார். அதுபோல் விஜயகாந்த் வெற்றி பெறுவார்” என்றார்.
இதில், மாநில இளைஞரணிச் செயலாளர் சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.