

சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 8-ம் தேதி வந்த ரயிலில் தனிப்பெட்டியில் ரூ.323 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன. ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு, ரூ.5.75 கோடி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இந்த வழக்கில் இதுவரை முக்கியமான தடயங்கள் சிக்கவில்லை. செல்போன் பேச்சுகள் மற்றும் சிக்னல்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் நம்பத்தகுந்த சில தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்துள்ளன. அதை வைத்து சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை சேலத்தில் வைத்து பிடித்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி ஐ.ஜி.மகேஷ்குமார் சேலம் சென்றுள்ளார்.
கொள்ளை திட்டம் சேலத்தில் உருவாக்கப்பட்டு, ஈரோட்டில் வைத்து ரயிலின் மேற்கூரையில் எளிதில் வெட்டி எடுக்கும் வகையில் துளைகள் இட்டு, பின்னர் தாம்பரம் - சேத்துப்பட்டுக்கு இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளை நடந்திருக்கலாம். 5 நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் கிடைத்த இந்த தகவல்களைத் தொடர்ந்து சேலம், ஈரோடு, தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு நேற்று காலையில் சிபிசிஐடி அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர்.