இலவச அரிசி தேவையில்லை: ரேஷன் அட்டைகளை அதிமுகவினர் பேரவையில் ஒப்படைப்பு - காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒப்படைப்பதாக அறிவிப்பு

இலவச அரிசி தேவையில்லை: ரேஷன் அட்டைகளை அதிமுகவினர் பேரவையில் ஒப்படைப்பு - காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒப்படைப்பதாக அறிவிப்பு
Updated on
2 min read

இலவச அரிசி தேவையில்லை எனக்கூறி புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்தனர். காங்கிரஸ் எம்எல்ஏக்களும் இதேபோல் தாங்களும் ரேஷன் அட்டைகளை ஒப்படைப்பதாக தெரிவித்தனர். அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இதை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் அவையில் கடும் விவாதம் நடந்தது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் நடந்த விவாதம்:

அன்பழகன் (அதிமுக): புதிய திட்டங்கள் காங்கிரஸ் அரசில் செயல்படுத்தவில்லை. பழைய திட்டங்களும் செயல்படவில்லை. நிதி நிலையில் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கிறீர்கள்.

தகுதியான நபர்களுக்கே இலவச திட்டங்கள் சென்றடைய வேண்டும். அரசு ஊழியர்கள், வசதியானவர்கள் என 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச அரிசி தேவையில்லை. `இலவசம் தேவையில்லை' என தெரிவித்து ரேஷன் கார்டை ஒப்படைத்தால் 'க்ரீன் ரேஷன் கார்டு' வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

முதல்வர், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், அரசு சார்பு ஊழியர்களுக்கு இலவச அரிசி தேவையில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் நால்வருக்கும் இலவச திட்டங்கள் வேண்டாம். தகுதியானவருக்கு சென்றடைய வேண்டும். அதனால் எங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கிறோம். உடனே `க்ரீன் கார்டு' தர வேண்டும்.

அமைச்சர் கந்தசாமி: அதிமுகவை பாராட்டுகிறோம். அரசு ஊழியர்களில் சில குடும்பங்களுக்கு இலவச அரிசி தேவைப்படும். மாற்றம் புதுச்சேரியில் கண்டிப்பாக உருவாகும். சென்டாக் நிதி, வீடு கட்டும் திட்டம், இலவச அரிசி என அனைத்து இலவசங்களும் தேவையில்லை என அனைத்து எம்எல்ஏக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

முதல்வர் நாராயணசாமி: ரேஷன் கார்டுகளை ஒப்படைக்குமாறு வசதி படைத்தோர், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு மனம் உகந்து தர வரவு செலவு திட்டத்தில் அறிக்கையில் வலியுறுத்தினோம். இலவச அரிசி திட்டம் தேவையில்லை என்று ரேஷன் கார்டுகளை அதிமுகவினர் தந்துள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தந்து விடுவோம்.

அமைச்சர் கந்தசாமி: ரேஷன் கார்டு வைத்துள்ளோர் விவரம் தொடர்பாக ஒரு வாரத்தில் ஆய்வு செய்யப்படும். 30 தொகுதிகளிலும் இந்த ஆய்வு நடக்கும்.

சபாநாயகர் வைத்திலிங்கம் : இலவசங்கள் தேவையில்லை என தெரிவித்து ரேஷன் அட்டையை ஒப்படைப்பதில் பேரவை முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மக்களுக்கு நாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

முதல்வர் நாராயணசாமி: நூறு கோடி சொத்து வைத்துள்ளோர் கூட இலவசத்துக்காக காத்து கிடப்பதை பார்க்கிறோம். புதுச்சேரியில் இக்கலாச்சாரம் இருக்கக் கூடாது.

குடிமை பொருள் வழங்கலில் மோசமான நிர்வாகம்

சிவா (திமுக): இலவச அரிசி வாங்கியதில்லை. இப்போது இங்கு பேசிவிட்டு வெளியில் சென்று வேறு வார்த்தை பேசக்கூடாது. ஒரே மனதுடன் இருக்க வேண்டும். மோசமான நிர்வாகம் குடிமை பொருள் வழங்கல் துறையில் நடக்கிறது. அங்குள்ள அதிகாரிகள் சிலரின் செயல்பாடு மோசமாக உள்ளது

அமைச்சர் கந்தசாமி: நான் அடுத்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. வசதி படைத்தோர் இலவசங்களை பெறுவதை தடுத்து ஏழைகளுக்கு மட்டுமே இலவசங்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். ஆய்வு உறுதியாக நடக்கும். நலத்திட்டங்கள் சரியாக செய்ய முடியாத நிலை இதனால் மாறும்.

ஜெயபால் (என்.ஆர்.காங்கிரஸ்): `அனைவருக்கும் இலவசம்' என்பதுதான் எங்கள் கட்சிக்கு உடன்பாடாகும். உங்கள் கொள்கை முடிவில் எங்களுக்கு உடன்பாடில்லை. எங்களை கேட்க வேண்டியதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசம் தரப்படும்.

அமைச்சர் கந்தசாமி: கடந்த ஆட்சியில் முன்னேற்றமில்லை. பலரும் பாதிக்கப்பட்டனர்.

அன்பழகன்: திட்டமிடல் இல்லாமல் கடந்த ஆட்சியில் மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

அரசு கொறடா அனந்தராமன்: புதுச்சேரி மோசமடைந்ததற்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்.

அசோக் ஆனந்து (என்.ஆர்.காங்கிரஸ்): நாங்கள் வந்தால் இலவசங்கள் கொடுப்போம்.

முதல்வர்: கடந்த ஆட்சியில் வேறு திட்டங்கள் நிதியை மாற்றி செயல்படுத்தினர். மக்கள் திட்ட நிதியை மாற்றினர்.

கந்தசாமி: கடந்த ஆட்சியில் ஊதியம் அனைவருக்கும் சரியான நாட்களில் செயல்படவில்லை. பல நிறுவனங்கள் செயல்படவில்லை.

அன்பழகன்: கோடீஸ்வரர்களாக என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர். 20 கிலோ இலவச அரிசிக்கு இப்படி ஆசைப்படுகிறீர்களே!

சபாநாயகர்: மோடி அரசை என்.ஆர்.காங்கிரஸார் ஆதரிக்கிறார்கள். பிரதமர் மோடி, `இலவசங்கள் ஏதும் தரக்கூடாது' என்று கூறுகிறார். கேஸ் மானியத்தை ஒப்படைக்க கோருகிறார். கூட்டணியிலுள்ள நீங்களே அவரது பேச்சுக்கு எதிராக மாற்றி பேசினால் என்ன செய்வது?

அதற்கு உறுப்பினர் ஜெயபால் பதிலளிக்க மறுத்து விட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in