Published : 14 Mar 2017 11:11 am

Updated : 16 Jun 2017 13:49 pm

 

Published : 14 Mar 2017 11:11 AM
Last Updated : 16 Jun 2017 01:49 PM

ஜாதிச்சான்றிதழ் கிடைக்காமல் கொல்லிமலை மாணவர்கள் கல்லூரியில் சேர முடியாத சூழல்

‘கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வசித்து வரும் மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க கால தாமதம் செய்வதால், மேல்நிலைக் கல்வி முடித்தவர்கள் கல்லூரியில் சேர முடியாத சூழல் நிலவி வருகிறது’ என, தமிழ்நாடு பழங்குடியினர் மலையாளி நல அமைப்பு மாநில தலைவர் கே.குப்புசாமி தலைமையிலான கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட விவரம்:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் நடுக்கோம்பை, கீழ்செங்காடு, ஆணங்காடு, புதுவளவு, விளங்காடு ஆகிய கிராமங்களில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மலை கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, ஜாதிச்சான்றிதழ் இல்லாததால், கல்லூரியில் சேர முடியாத நிலையில் உள்ளனர்.

புதுவளவு கிராமத்தைச் சேர்ந்த தந்தையை இழந்த மாணவி கலைப்பிரியா, கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். எனினும், ஜாதிச்சான்றிதழ் இல்லாததால், அவரால் கல்லூரியில் சேர இயலவில்லை. இதுபோல் ஏராளாமான மாணவர்கள் கல்லூரி படிப்பை படிக்க முடியாத நிலையில் கூலி தொழிலாளர்களாகவும், ஆலைத் தொழிலாளர்களாகவும் மாறி உள்ளனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில் கொல்லிமலை, சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய வருவாய் வட்டங்களில் உள்ள இந்து மலையாளி இன மாணவர்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜாதிச்சான்றிதழ் கிடைக்க வருவாய் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும், எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.


கொல்லிமலை மக்கள்மலைவாழ் மக்கள்ஜாதிச் சான்றிதழ்கல்லூரி சேர்க்கைதமிழ்நாடு பழங்குடியினர் மலையாளி நல அமைப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author