

என்னிடம் அன்பும் பாசமும் காட்டியவர் எம்.ஜி.ஆர். என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு 17-1-2017-ல் (இன்று) நிறைவு பெறுகிறது. அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த போதிலும் எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் ஆழமான நட்பு தொடர்ந்தது. தனிப்பட்ட முறையில் என்னிடம் அன்பும், பாசமும் காட்டி ஊக்கப்படுத்தியவர். திமுக கொள்கைப் பிரச்சார நாடகத்தில் நான் நடித்தபோது அதற்கு தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கி உற்சாகப்படுத்தியை என்னால் மறக்க முடியாது.
மறைந்த எம்.ஜி.ஆரின் நினைவிடத்தை அரசியல் நாகரிகமும், பண்பாடும் போற்றும் கருணாநிதி சீரும், சிறப்புமாக அமைத்தார். தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்துக் கும், தரமணியில் உள்ள திரைப்பட நகருக்கும் எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டியதை இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு பெறும் இந்த நேரத்தில் அவரது நினைவைப் போற்றி, எவ்வித பலனும் எதிர்பார்க்காமல், அனுபவிக்காமல் அவர் மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு என மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆரின் நினைவைப் போற்றுகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.