Published : 04 Jan 2017 09:10 AM
Last Updated : 04 Jan 2017 09:10 AM

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி: சிவாஜிக்கு மே 18-க்குள் மணிமண்டபம் - மெரினாவில் இருந்தும் சிலை அகற்றப்படும்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மே 18-ம் தேதிக்குள் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு, மெரினா சாலை சந்திப்பில் இருந்து அவரது சிலை அகற்றப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலை மே 18-ம் தேதிக்குள் அகற்றப்பட்டு, மணிமண்டபத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் கடந்த 2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து காந்தியவாதி சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சீனிவாசன் இறந்த பிறகு, இந்த வழக்கை அவரது மகன் நாகராஜன் நடத்திவந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, வாகனப் போக்குவரத்துக்கு சிவாஜி சிலை இடையூறாக இருப்பதாக போலீஸார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக தமிழக அரசு விரைந்து முடிவெடுக்க உத்தரவிட்டனர். ஆனாலும், சிலை அகற்றப்படாததால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது நாகராஜன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையில், அடையாறு அருகில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட 65 சென்ட் நிலத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஒதுக்கிக் கொடுத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அதன்பிறகு அரசு சார்பிலேயே மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி மணிமண்டபத்தை 2016 நவம்பர் 15-ம் தேதிக்குள் கட்டி முடித்து, கடற்கரைச் சாலையில் உள்ள சிலையை அகற்ற உயர் நீதிமன்றம் காலக்கெடு விதித்தது. அந்தக் கெடு முடிந்தும், சிலை அகற்றப்படவில்லை.

அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

இந்நிலையில், தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலர் மீதான அவமதிப்பு வழக்கின் விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது, சிவாஜி கணேசனுக்கு மே 18-ம் தேதிக்குள் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு, மெரினா சாலை சந்திப்பில் இருந்து அவரது சிலை அகற்றப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மே 18-ம் தேதிக்குள் சிலையை அகற்ற அவகாசம் வழங்கினர். மேலும், தமிழக அரசு கூறியபடி சிலையை உரிய தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x