

சிறுவாணி நதியின் குறுக்கே கேரளம் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்ற தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அனுப்பிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் நடைபெற்றது. அதில், ‘‘சிறுவாணி நதியின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் அணை கட்டும் கேரள அரசின் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்ள நிலையான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு’’ மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்துக்கு வல்லுநர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெற்ற வல்லுநர் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்குமாறு கேரள அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்துக்களைக் கேட்டபிறகே தீர்மானிக்க முடியும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை
தமிழக அரசுக்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் 2013 செப்டம்பர் 19-ம் தேதி எழுதிய கடிதத்தில், ‘‘சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, காவிரி நடுவர் மன்றத்தில் அனுமதி பெறுமாறு கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது’’ என தெரிவித்திருந்தது.
ஆனால், தமிழக அரசின் கருத்துக்களை கேட்காமல் வல்லுநர் மதிப்பீட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ‘‘அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்துக்கான நிலையான ஆய்வு வரம்புகள் வழங்குவதற்கான பரிந்துரை தொடர்பாக வல்லுநர் குழுவின் 96-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி அமைக்கப்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை நடைமுறைக்கு வரும் வரையிலும், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் இறுதிசெய்யப்படும் வரையிலும் கேரள, கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது’’ என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பர் 2-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை இந்தக் கடிதத்துடன் இணைத்துள்ளேன்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சிறுவாணி நதியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்ள நிலையான ஆய்வு வரம்புகளுக்கு அனுமதிக்குமாறு அவசர கதியில் வல்லுநர் மதிப்பீட்டு குழு செய்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக் கூடாது.
இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்துக்கு தாங்கள் (பிரதமர்) உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.