

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து அவரை நேற்று முன்தினம் இரவு சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையம் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 16 பேரை போலீஸார் கைது செய்தனர். அதில், யுவராஜ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த மே மாதம் 26-ம் தேதி யுவராஜை ஜாமீனில் விடுவிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் யுவராஜுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யும்படி தமிழக அரசு தரப்பில் கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 24-ம் தேதி அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், யுவராஜுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதையடுத்து நேற்று இரவு சென்னையில் யுவராஜை, நாமக்கல் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். ஏடிஎஸ்பி ஸ்டாலின், ஆய்வாளர் பிருந்தா மற்றும் போலீஸார் அவரை நேற்று அதிகாலை 3 மணி அளவில் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் காலை 6 மணிக்கு நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அதையடுத்து நேற்று காலை 9.30 மணிக்கு யுவராஜ் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். யுவராஜை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது யுவராஜ், தன் மீது நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 7 வழக்குகள் உள்ளதால், அடிக்கடி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியுள்ளது. வேலூரில் இருந்து வந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே தன்னை சேலம் சிறையில் அடைக்கும்படி கோரிக்கை விடுத்தார். அற்கு சிபிசிஐடி காவல் துறையினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
அதையடுத்து, யுவராஜ் தனது கோரிக்கையை விசாரணை நீதிமன்றமான மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், செப்டம்பர் 8-ம் தேதி வரை வேலூர் மத்திய சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.