Last Updated : 21 Jan, 2017 03:02 PM

 

Published : 21 Jan 2017 03:02 PM
Last Updated : 21 Jan 2017 03:02 PM

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தாக்கம்: கால்நடைத்துறை செயலாளருக்கான கடிதத்தை கொண்டு சென்ற அமைச்சர்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் வலுத்துள்ள நிலையில், தமிழக கால்நடை செயலாளரிடம் அளிக்க வேண்டிய அவசர சட்ட முன்வடிவு அடங்கிய உறையை, அத்துறையின் அமைச்சரான பா.பாலகிருஷ்ணா ரெட்டி கையில் கொண்டு சென்ற சுவாரஸ்யம் நடைபெற்றுள்ளது.

தமிழக அரசால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட ஜல்லிக்கட்டு அவசர சட்ட முன்வடிவு வெள்ளிக்கிழமை இரவில் இறுதி வடிவம் பெற்றது.

இதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை காலை கையெழுத்து இட்டார். தமிழக அரசின் கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளரின் பெயருக்கு மேல் உறையில் இட்டு அனுப்பப்பட்டது.

இந்த உறையை அத்துறையின் அமைச்சரான பாலகிருஷ்ணா ரெட்டி, தன் செயலாளருக்கான உறையை தானே கையுடன் எடுத்துச் சென்றார். ஒரு துறையின் செயலாளருக்கான உறையை அதன் அமைச்சரே கையுடன் எடுத்துச் சென்றது சுவாரஸ்யமாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லியில் பணியாற்றும் தமிழக அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ‘ஒரு துறையின் அமைச்சர்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் அவர்களுக்கான கடிதங்களை எடுத்து சென்றிருக்கிறோம். முதல்வருக்கான கடிதங்களை மாநில அமைச்சர்கள் எடுத்துச் சென்றதும் உண்டு. ஆனால், ஒரு செயலாளரின் உறையை அவரது அமைச்சரே முதன்முறையாக கையுடன் கொண்டு சென்றார். இது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு கோரி நடைபெற்று வரும் அறப்போராட்டத்தின் வலிமை காரணம் ஆகும்.’ எனத் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை பிரதமர் நரேந்தர மோடியை சந்திக்க வந்த தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியிலேயே தங்க நேரிட்டது. மறுநாள் காலை தான் சென்னை திரும்புவதால் அவர், தமிழகத்தின் கால்நடைத்துறை அமைச்சரை டெல்லிக்கு வரவழைத்தார். இவர், ஜல்லிக்கட்டு மீதான அவசரசட்ட முன்வடிவில் தேவைப்படும் உதவிகள் செய்வது காரணம் ஆகும்.

புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்தவரால் பெரிய உதவிகள் எதுவும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தேவைப்படவில்லை எனக் கருதப்படுகிறது. எனினும், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மீதான போராட்டத்தின் வீரியம் காரணமாக, தன் செயலாளருக்கான கடிதத்தை ரெட்டி தன் கையுடன் எடுத்து செல்ல நேரிட்டு விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x