

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த இலங்கை அரசைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் இம்மாதம் 5-ம் தேதி பாமக சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "போதைப்பொருள் கடத்தியதாக புனையப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும், விசாரணைக் கைதிகளாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மேலும் 9 மீனவர்களையும் மீட்க வேண்டும் என்ற முழக்கங்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல கூறியுள்ள கருத்துக்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் 5 பேரும் அப்பாவிகள்; அவர்களுக்கு அநியாயமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்ற தமிழகத்தின் வாதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. 5 மீனவர்களுக்கும் போதைப் பொருள் கடத்தலில் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ள மத்திய அரசு, இவ்விஷயத்தில் நீதி சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறது.
தண்டிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க சட்டரீதியாகவும், தூதரக ரீதியாகவும், இரு நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அறிவித்திருப்பது ஓரளவு நிம்மதியளிக்கிறது.
ஆனால், இந்த நிம்மதியைக் குலைக்கும் வகையில், "இந்திய மீனவர்கள் 5 பேரையும் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கையின் சட்டத்தை வளைக்க முடியாது. இந்தத் தீர்ப்பு குறித்து இந்தியா தெரிவித்துள்ள கருத்துக்கள் இலங்கை மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று இலங்கை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கும் நிலையில், அவர்களை இப்போதே தூக்கிலிட வேண்டும் என்ற உணர்வுடன் இலங்கை அமைச்சர் கூறிய கருத்தை கேட்கும்போது, தமிழக மீனவர்களுக்கு கொழும்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டத் தீர்ப்பு இலங்கை அரசால் முன்மொழியப்பட்ட ஒன்றோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.
தமிழக மீனவர்களை தூக்கிலிடுவது தான் இலங்கை ஆட்சியாளர்களின் விருப்பமாக இருந்தால், அவர்களின் கண்ணசைவுக்கு ஏற்றவாறு செயல்படும் இலங்கை நீதிமன்றங்களில் செய்யப்படும் மேல்முறையீட்டுக்கு என்ன பயன் கிடைக்கும்? என்பது தெரியவில்லை. சட்டப்படி செயல்படுகிறோம் என்ற பெயரில், இந்தியாவைச் சீண்டிப்பார்ப்பதற்காக நீதிமன்றங்களின் உதவியுடன் தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது இலங்கை ஆட்சியாளர்களின் வாடிக்கை ஆகிவிட்டது. இத்தகைய சூழலில் வழக்கம்போலவே இலங்கை அரசுக்கு வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் விடுத்துக் கொண்டிருந்தால் அது இந்தியாவை சிங்களப் பேரினவாதிகள் எள்ளி நகையாடுவதற்குத் தான் உதவுமே தவிர, தமிழக மீனவர்களைக் காப்பாற்ற ஒருபோதும் உதவாது.
இலங்கை சட்டத்தை மதிக்கும் நாடல்ல என்பது பல தருணங்களில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை சட்டத்தை மதிக்கும் நாடாக இருந்தால், சென்னையில் இந்தியக் குடிமனான திருநாவுக்கரசு என்பவரை சுட்டுகொன்ற வழக்கில் தேடப்பட்டுவரும் டக்ளஸ் தேவானந்தாவை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாத இலங்கை அரசு அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்து வருகிறது. அதேபோல், இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் ராஜிவை தாக்கி கொல்ல முயன்ற அந்நாட்டுக் கடற்படைவீரருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்ட போதிலும் 2 ஆண்டுகளில் அவர் விடுதலை செய்யப்பட்டதிலிருந்தே இலங்கையை புரிந்து கொள்ளலாம்.
அதிரடி நடவடிக்கை தேவை
எனவே, இதேபோன்ற சூழல்களில் இந்தியாவிடம் வாலாட்டிய பாகிஸ்தானை ஒடுக்க இந்திரா காந்தி எத்தகைய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாரோ, அதேபோன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தான் மீனவர்களைக் காப்பாற்ற முடியும். எனவே, 5 மீனவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால், மோசமான விளைவுகள் ஏற்படும் என இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த இலங்கை அரசைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், மக்களைப் பாதிக்கும் மின்கட்டண உயர்வு மற்றும் பால்விலை உயர்வை கண்டித்தும், அவற்றை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும். 3 முக்கியப் பிரச்சினைகளுக்காக நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்பார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.