Published : 16 Mar 2017 07:39 AM
Last Updated : 16 Mar 2017 07:39 AM

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: பழனிசாமி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் - புதிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம் பெறுமா?

பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. எடப்பாடி பழனிசாமி அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலும் ஆட்சியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சசிகலா வின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களுக்கிடையே கடந்த பிப்ரவரி 16-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. அதன்பின் பிப்ரவரி 18-ல் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.

ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதிய அரசு பொறுப்பேற்றதும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்தன. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், காலை 10.30 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்கிறார். இது எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கும் முதல் பட்ஜெட் ஆகும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அதனடிப்படையில், இந்த அரசும் புதிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலின்போது, துறைகள் வாரியாக பல்வேறு வாக்குறுதிகளை ஜெயலலிதா அளித்தார். தேர்தல் முடிந்து முதல்வராக பொறுப்பேற்றதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடல், மின் நுகர்வோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, பல்வேறு புதிய திட்டங்களையும் சட்டப் பேரவையில் 110-வது விதியி்ன் கீழ் அறிவித்து வந்தார். அவற்றுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.

புதிய திட்டங்கள்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் அறிவித்த திட்டங் களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை கருத்தில்கொண்டு புதிய திட்டங்கள், அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும் மேலும் 500 டாஸ்மாக் மதுக் கடைகள் மூடல், மகளிருக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர் உள்ளிட்ட திட்டங்களை அறிவித் தார். இவற்றுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும். இது தவிர, தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, இலவச கைபேசி திட்டமும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், பற்றாக்குறை பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதன்பின், மாநில அரசுக்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதிப்பகிர்வு, நிதி ஆணையத்தின் நிதி, வார்தா புயல் மற்றும் வறட்சி நிவாரண நிதி ஆகியவை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு இன்னும் வரவில்லை. டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டது, பத்திரப்பதிவு வருவாய் குறைந்தது, பண மதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் தமிழக அரசின் வருவாயும் குறைந்துள்ளது. இந்த பாதிப்புகள் பட்ஜெட்டில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

இதை சமாளிக்கவே சமீபத்தில் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியது. இதேபோல, நிதிச் சுமையை சமாளிக்க சில வரி உயர்வுகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட் டதும் அலுவல் ஆய்வுக் குழு கூடி, பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்யும். வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடர் ஒன்றரை மாதம் வரை நடக்கும். ஆனால், தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடர் 23-ம் தேதியுடன் முடிந்துவிடும் என்று தெரிகிறது. பட்ஜெட் மீது மட்டும் விவாதம் நடத்தி நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாகவும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பிறகு துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற மீண்டும் பேரவை கூடும் என்றும் தெரிகிறது. இருப்பினும், இன்று பிற்பகல் பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வுக்குழுவில்தான் கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக உள்ளார். அவருக்கு ஆதரவாக தற்போது 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி அரசுக்கு எதிராக உள்ளது. இதற் கிடையே, பேரவைத் தலைவர் பி.தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டுவர தயாராக உள்ளது. இதற்கான கடிதமும் அளிக்கப்பட்டுவிட்டது.

இந்த தீர்மானத்தை இன்று பட்ஜெட்டுக்கு முன்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என திமுக வலியுறுத்தக் கூடும். அப்போது திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணியும் குரல் எழுப்பலாம். இதுதவிர விவசாயிகள், மீனவர்கள் பிரச்சினை, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளையும் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x