கடந்த 1980-ல் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் நக்ஸலைட் மகாலிங்கத்தை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை

கடந்த 1980-ல் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் நக்ஸலைட் மகாலிங்கத்தை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுப்பிரமணி என்ற போலீஸ்காரர் நக்ஸல்களின் நடமாட்டம் குறித்து ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார். 1980-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி இரவு மகாலிங்கம், பச்சயைப்பன், பெருமாள், ராஜரத்தினம் ரெட்டி ஆகியோர் சுப்பிரமணியை வெட்டிவிட்டு தப்பினர். இது தொடர்பாக, திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு 1982-ம் ஆண்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன், பெருமாள் மற்றும் கண்ணாமணி ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் உயிரிழந்ததால் வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

தலைமறைவாக இருந்த மகாலிங்கத்தை, கடந்த 2007-ம் ஆண்டு தேனி மாவட்டம் வருசநாட்டு வனப் பகுதியில் அதிரடிப்படை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, போலீஸ்காரர் சுப்பிரமணியை தாக்கிய வழக்கில் மகாலிங்கத்தை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த அவர் 2010-ம் ஆண்டு தலைமறைவானார்.

கேரளாவில் கைது

கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கியிருந்த மகாலிங்கத்தை க்யூ பிரிவு போலீஸார் கடந்த மாதம் 24-ம் தேதி கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், போலீஸ்காரர் சுப்பிரமணியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக, வேலூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கைது ஆணையை பெற்றுள்ளனர்.

இன்று அல்லது நாளை மதுரை மத்திய சிறையில் உள்ள அவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்ய உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, அவரை விரைவில் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சிபிசிஐடி போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in