Published : 14 Apr 2017 08:59 PM
Last Updated : 14 Apr 2017 08:59 PM

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்

புரட்சியாளர் அம்பேத்கரின் உணர்வும், லட்சியமும் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டவர் புரட்சியாளர் அம்பேத்கர். அவரது லட்சியம், கொள்கை, கோட்பாடுகள், கனவு அனைத்தும் அதனை மையப் படுத்தியே இருந்தது. மதவாத சக்தி களை எப்படியாவது தமிழகத்தில் திணித்துவிட வேண்டும் என மத்தியில் உள்ள பாஜக அரசு பல்வேறு வகைகளில் முயற்சித்து வருகிறது. அம்பேத்கரின் உணர்வும், லட்சியமும் இருக்கும் வரை தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் நிச்சயம் காலூன்ற முடியாது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை கைப்பற்றிய ஆவணங்களில் இடம்பெற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இந்த கடிதத்தை மும்பையில் ஆளுநரை நேரில் சந்தித்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனும், எம்.பி.க்களும் வழங்கியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். எனவே, பொறுத்திருந்து பார்ப்போம்.

அதிமுக அரசை எதிர்த்து அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். இந்த ஆட்சியின் அவலட்சணததை எடுத்துச் சொல்ல இதற்கு மேல் அவசியம் இல்லை.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x