

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்களில் ஒரு மனுவை திடீரென புதன்கிழமை திரும்பப்பெற்று கொண்டார்.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனு திடீர் வாபஸ்!
தி.முக.பொதுச்செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞரும், தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான தாமரைச் செல்வன் வாதிட்டார். அப்போது, ''க.அன்பழகனின் சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தோம். ஒரு மனுவில், 'ஜெயலலிதாவின் வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட நல்லம்ம நாயுடுவை மீண்டும் விசாரிக்க வேண்டும்' என கோரி இருந்தோம். தற்போது உள்ள வழக்கின் சூழலைக் கருத்தில் கொண்டு அம்மனுவை திரும்ப பெற்றுக் கொள்கிறோம்''என்றார். அதற்கு நீதிபதி டி'குன்ஹா-வும் சம்மதித்தார்.
ஜெ.தரப்பு ஆட்சேபம்
தொடர்ந்து பேசிய தாமரைச் செல்வன், 'வழக்கின் அடுத்த விசார ணையின்போது ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளை பெங்களூர் சிறப்புநீதிமன்றத்திற்கு கொண்டுவரும் மனு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்' என கோரிக்கை வைத்தார்.
ஜெ.தரப்பு வழக்கறிஞர் பி.குமார், ''இவ்வழக்கின் விசாரணையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய உரிமை அரசு வழக்கறிஞர் பவானிசிங்குக்கு மட்டுமே இருக்கிறது. மூன்றாம் தரப்பான அன்பழகனின் வழக்கறிஞருக்கு இல்லை'' என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி'குன்ஹா, க.அன்பழகனின் கோரிக்கையை ஏற்பதாகத் தெரிவித்தார். மேலும் அன்பழகனின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஜெயலலிதா தரப்பிற்கும், அரசு தரப்பிற்கும் உத்தரவிட்டார். அம்மனு குறித்து வழக்கின் அடுத்த விசாரணையின் போது விரிவாக விவாதிக்கப்பட்டு,தீர்ப்பு வழங்கப்படும்''என தெரிவித்தார்.
வழக்கின் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.