

விவசாயிகளின் பிரச்சினை களுக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படு கிறது. இந்தப் போராட்டத்துக்கு வணிகர்கள், தொழிற்சங்கத்தினர், திரையுலகினர் ஆதரவு தெரிவித் துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரி யத்தை அமைக்க வேண்டும். விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி திமுக சார்பில் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன. அதிமுக, பாஜக, தமாகா, தேமுதிக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் பங்கேற்கவில்லை. விவசாயிகள் பிரச்சினைகளை வலியுறுத்தி 25-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இப்போராட்டத்தில் வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள னர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா, வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளை யன் ஆகியோர் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப் படுகிறது. கடையடைப்பு போராட் டத்துக்கு கோயம்பேடு வணிக வளாக வணிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பஸ் தொழிலாளர்கள்
தொமுச, சிஐடியு உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங் களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஒரு லட்சம் போக்குவரத்து ஊழி யர்கள் போராட்டத்தில் பங்கேற் கின்றனர் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், தமி ழகம் முழுவதும் நாளை பெரும் பாலான பேருந்துகள் ஓடாது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ, சரக்கு வாகனங்களும் 25-ம் தேதி இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய லாரி உரிமை யாளர்கள் சம்மேளனம் சார்பில் 4 லட்சம் லாரிகளும் 75 ஆயிரம் மணல் லாரிகளும் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் கலை தொழிலாளர்கள் சங்கம், கோழிப் பண்ணை உரிமையாளர் கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங் களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
படப்பிடிப்பு ரத்து
விவசாயிகளுக்கு ஆதரவாக திரையுலகமும் முழு அடைப்பில் பங்கேற்கிறது. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப் படுகின்றன. படப்பிடிப்புகளும் நாளை ரத்து செய்யப்படுவதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
அதேநேரம் இந்த கடையடைப் புப் போராட்டத்தில் அதிமுக, பாஜக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. ஈரோட்டில் பள்ளிக்கல்வி அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறும் போது, ‘‘அரசு ஒருபோதும் போராட் டத்துக்கு ஆதரவாக செயல் படாது. விதிமுறைக்கு உட்பட்டு தான் நடக்கும். நாங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க மாட் டோம். விவசாயிகள் பிரச்சினை களை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.
அரசு முழு அடைப்பில் பங் கேற்காத நிலையில், அரசு பேருந்து களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் முடிவு செய்துள் ளன. முழு அடைப்புப் போராட்டத் தின்போது அசம்பாவித சம்பவங் களை தவிர்க்க தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின் றனர்.