

தமிழகத்தில் மொத்தம் 84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும், நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் சமீபத்தில் சொல்லப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி மொத்தம் 84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமாக சாதி வாரியாக தாழ்த்தப்பட்டவர்கள் 18,24,342, அருந்ததியினர்கள் 1,96,784, மலைவாழ் இனத்தினர்கள் 63,898, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் 22,00,498, இஸ்லாமியர்கள் 3,24653, பிற்படுத்தப்பட்டோர் 34,53,868, மற்றவர்கள் 2,67,821 என மொத்தம் 84 லட்சம் பேர் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், பல இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்து தங்களுடைய விவரங்களை பதிவு செய்யாமல் பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.
கடந்த வாரம் சட்டப்பேரவையில் இது குறித்து விவாதம் வந்த போது அதிமுகவும், திமுகவும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு விவாதித்தார்களே தவிர, ஆக்கபூர்வமான விவாதத்தை நடத்தவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே அதிமுக ஆட்சியின் போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி மக்கள் வரிப்பணம் பலகோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதே தவிர, மாநாடு முடிந்து ஒரு வருட நிறைவு பெற உள்ள நிலையில் கூட, எந்த தொழிற்சாலைகளோ அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்போ இந்த அரசு ஏற்படுத்தியதாக நிரூபிக்கப்படவில்லை.
வேலைவாய்ப்பு இல்லாமல் பல லட்சம் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து அவர்களின் எதிர்காலமே மிகப்பெரிய கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக மதுவுக்கு அடிமையாவதும், செயின் பறிப்பு, கொலை, கொள்ளை, போன்ற பல சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு ஆட்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த அரசு இந்த பிரச்சினைகளை மிக முக்கிய பிரச்சினையாக கருத்தில் கொண்டு, கல்லூரிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதும், மாவட்டம் வாரியாக தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதும், அனைவருக்கும் வேலைவாய்ப்பை அவரவர்கள் தகுதிக்கு ஏற்ப வழங்கவேண்டும்.
லஞ்சம் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு சுலபமாக தொழில் தொடங்க வேண்டிய கட்டமைப்பு வசதிகள், சாலை வசதி, மின்சார வசதி போன்ற அனைத்து உதவிகளையும் வழங்கி உடனடியாக தொழிற்சாலைகள் தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்ற மக்களின் முக்கிய பிரச்சனைகளை சட்டசபையில் பேசி மக்களுக்கு நன்மை பயக்கும் சட்டசபையாக இருக்க வேண்டுமே தவிர, ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை பரிசாக அளிக்கக்கூடிய அரசாகவே உள்ளது.
திமுகவோ தினந்தோறும் ஒரு நிகழ்வை சட்டசபையில் ஏற்படுத்தியும், போட்டி சட்டசபையை நடத்தியும், சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் முனைப்பிலையே அதிக கவனம் செலுத்திக்கொண்டு இருக்கிறது. நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.