சமூகக் கூட்டாண்மை திட்டத்திலிருந்து புகையிலை நிறுவனங்களை விலக்கக் கோரி வழக்கு
பொதுமக்களுக்கு உதவி செய்வதற்கான சமூகக் கூட்டாண்மை பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) திட்டத்திலிருந்து சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை விலக்கி வைக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புகை யிலைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதற்கான தமிழ்நாடு மக்கள் இயக்கம் சார்பில் அதன் கன்வீனர் எஸ்.சிரில் அலெக்சாண்டர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
பெரும் தொழில் நிறுவனங்கள் தங்கள் ஆண்டு லாபத் தொகையில் 5 சதவீதத்தை பொதுமக்களின் நலன் சார்ந்த பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கும் வகையில் சமூகக் கூட்டாண்மை பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதன் காரணமாக இந்தியாவில் ஆண்டு தோறும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர்.
தற்போதைய நிலை தொடருமானால் 2020-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் நிகழும் மொத்த உயிரிழப்புகளில் 13 சதவீத உயிரிழப்புகளுக்கு புகையிலைப் பொருள்கள்தான் காரணமாக இருக்கும்.
இந்த சூழலில் சமூகக் கூட்டாண்மை பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) திட்டத்திலிருந்து புகையிலை நிறுவனங்களை விலக்கி வைக்க வேண்டும். அந்தத் திட்டத்தில் பங்கேற்க அனுமதித்தால் அந்த நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களை விளம்பரப் படுத்திக் கொள்வதற்கே அது உதவுவதாக இருக்கும்.
மாறாக, சி.எஸ்.ஆர். திட்டத்துக்கு செலவிட வேண்டிய தொகையை நேரிடையாக மத்திய, மாநில அரசுகளிடம் அந்த நிறுவனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக அரசுத் தரப்பில் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
