மதன் செய்த மோசடிகளுக்கும் எஸ்.ஆர்.எம். நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை: பாரிவேந்தர் விளக்கம்

மதன் செய்த மோசடிகளுக்கும் எஸ்.ஆர்.எம். நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை: பாரிவேந்தர் விளக்கம்
Updated on
2 min read

மதன் என்பவர் செய்துள்ள மோசடிகளுக்கும், எமது நிறுவனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.

வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன். இவர் பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் “மதன், தான் காசியில் கங்கையில் சமாதி அடைவதாக கூறி ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்” என்ற தகவல் பரவி வருகிறது.

கடிதத்தை எழுதி வைத்து விட்டு சென்ற மதன் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக மதன் ரூ.52 லட்சம் மோசடி செய்துள்ளார் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த இரண்டு தினங்களாக ஊடகம் உட்பட பல்வேறு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் எங்களது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகக் குழுமம் பற்றிய பல்வேறு தவறான தகவல்கள் வெளியிடப்படுள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ள மொத்த தகவலும் பொய்யானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை.

40 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது நிறுவனம் ஈட்டியுள்ள நற்பெயரைக் குலைக்கும் வகையிலும் பொதுவாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு தவறான அபிப்பிராயத்தை உண்டாக்கி வருகிறது.

குற்றச்சாட்டுகளின் முக்கிய காரணியாக மதன் என்பவருக்கும் எங்களது எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கும் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக எந்த விதமான தொடர்பு இல்லை. அத்துடன் அவர் கடிதத்தில் கூறியுள்ளது போன்று எந்தவொரு தொகையையும் எங்களது நிறுவனத்திடமோ, நிறுவனரிடமோ ஒப்படைக்கவில்லை என்பதே உண்மை.

எங்களது நிறுவனத்தின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலமாக சம்பாதித்த பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றும் நோக்கத்துடன் அவர் சமூக வலைதளங்கள் மூலமாகத் தகவல்களைப் பரப்பிவிட்டு தலைமறைவாகிவிட்டார். மேலும், அவர் எங்களது நிறுவனம் தவிர வேறு பல கல்வி நிறுவனங்களிலும் இதே போல மோசடி செய்திருக்கிறார் என்றும் தெரியவருகிறது.

வேந்தர் மூவிஸ் என்ற நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றும் அவரே பலமுறை தொலைக்காட்சி பேட்டிகளில் கூறியுள்ளதையும் நினைவு கூற விரும்புகிறோம்.

இந்திய ஜனநாயக கட்சியைப் பொருத்தவரை, அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தால் கடந்த பிப்ரவரி மாதம் கட்சியிலிருந்து விலக்கப்பட்டு விட்டார்.

இது திட்டமிட்ட மிரட்டல் நாடகம் என்பதால் நாங்கள் ஏற்கெனவே (29/05/2016) அன்றே சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்பு புகார் அளித்து அதன் மேல் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம். மதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் காவல்துறையை அணுகுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இதேபோல் எங்களது பல்கலைக்கழக இணையதளத்திலும் திட்டவட்டமாக நாங்கள் சேர்க்கை ஆலோசகர்களாக யாரையும் நியமிக்கவில்லை என்றும், அது போன்ற நபர்களிடமும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் நேரடியாக பல்கலைக்கழக அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளவும். எங்களது கல்வி நிறுவனம் நேரடியாக பணம் பெறுவது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளோம்.

எந்தவிதத் தொடர்பும் இன்றி தன்னிச்சையாக மதன் என்பவர் செய்துள்ள மோசடிகளுக்கும், எமது நிறுவனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதே சமயம் சட்டரீதியாக நாங்கள் எந்தவித விசாரணைக்கும் எங்களது ஒத்துழைப்பையும் தர எப்போதும் தயாராகவே உள்ளோம்" என்று பாரிவேந்தர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in