

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 6 நீதிபதிகள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக வி.பவானி சுப்ப ராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோரை நியமித்து கடந்த வாரம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட 6 புதிய நீதிபதிகளின் பதவி ஏற்பு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. புதிய நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துகுமாரசாமி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் விஜயநாராயணன், பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.நளினி உள்ளிட்டோர் புதிய நீதிபதிகளை வரவேற்றுப் பேசினர்.
இதையடுத்து, புதிதாக பதவியேற்ற 6 நீதிபதிகளும் நன்றி தெரிவித்து பேசி னர். இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதிய நீதிபதிகளாக பதவி ஏற்று இருப்பவர்களின் விவரம்:
நீதிபதி வி.பவானி சுப்பராயன்
தஞ்சாவூர் மாவட்டம், கள்ளபெரம் பூர் கிராமத்தில், எஸ்.ஜி.வெங்கட ராமன்-லட்சுமிகாந்தம் தம்பதியின ருக்கு மகளாக 1963-ம் ஆண்டு மே 15-ம் தேதி வி.பவானி சுப்பராயன் பிறந்தார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும், சட்ட மேற் படிப்பை அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் முடித்து, 1986-ம் ஆண்டு வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்தார். அய்யர் அண்டு டோலியா சட்ட நிறுவனத்திலும், மூத்த வக்கீல் என்.நடராஜனிடமும் ஜூனியராக பணி யாற்றினார். பின்னர், மத்திய அரசு வழக்கறிஞராகவும், தெற்கு ரெயில்வே, மாநில மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா
நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வர். இவரது பெற்றோர் தாசன் பெர்னாண்டோ- மெட்டில்டா. நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மதுரை மற்றும் சென்னை சட்டக்கல்லூரிகளில் சட்டப் படிப்பை முடித்து, 1989-ம் ஆண்டு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.
பின்னர், மூத்த வழக்கறிஞர் பெபின் பெர்னாண்டோ, தனது தாய் மாமா ஜி.ஆர்.எட்மண்ட் ஆகியோரிடம் ஜூனி யராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத் தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக கடந்த 2010-ம் ஆண்டு நியமிக்கப்பட் டார். பின்னர், தமிழ்நாடு மகளிர் ஆணை யத்தின் சட்டஆலோசகராக பணியாற்றி னார். மேலும், பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கும் சட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.ராஜாராமன், சந்திரா தம்பதிக்கு மகனாக 1968-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறந்தார். புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த அவர், 1991-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். பின்னர், மூத்த வழக் கறிஞரும் புதுச்சேரி மாநில முன்னாள் அரசு பிளீடருமான பி.கிருஷ்ணமூர்த்தி யிடம் ஜூனியராக பணியாற்றினார். அதன்பின்னர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இறுதியாக உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார்.
நீதிபதி அப்துல் குத்தூஸ்
தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த நீதிபதி அப்துல் குத்தூஸ், 1969-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பிறந்தார். இவரது தந்தை ஏ.அப்துல்காதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர். சட்டப்படிப்பை முடித்த அப்துல் குத்தூஸ் 1993-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து, மூத்த வழக்கறிஞர் எஸ்.சம்பத்குமாரிடம் ஜூனியராக சேர்ந்தார். அதை தொடர்ந்து, வங்கிகள் உட்பட பல நிறுவனங்களுக்கு வழக்கறிஞராக பணியாற்றினார்.
நீதிபதி எம்.தண்டபாணி
விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் நீதிபதி எம்.தண்ட பாணி. இவரது தந்தை டி.வி.எஸ்.மணி, எண்ணெய் மொத்த வியாபாரி. தாயார் பவுனம்மாள். திருச்சி சட்டக்கல்லூரி யில் சட்டப்படிப்பை முடித்த எம்.தண்ட பாணி, 1993-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். பின்னர், மூத்த வழக் கறிஞர் கே.துரைசாமியிடம் ஜூனியராக பணியாற்றினார். பின்னர், தனியாக பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்தார். தமிழக அரசின் கூடுதல் அரசு பிளீடர், அரசு வழக்கறிஞர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
நீதிபதி பி.டி.ஆதிகேசவலு
1970-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி நீதிபதி பி.டி.ஆதிகேசவலு பிறந்தார். இவரது பெற்றோர் பி.ஏ.தெய்வசிகா மணி- மணிமேகலை. தந்தை தெய்வ சிகாமணி பிரபல வழக்கறிஞர். தாயார் மணிமேகலை தலைமை ஆசிரியராக வும், நுகர்வோர் குறை தீர்வு மன்றத்தில் உறுப்பினராகவும் பணியாற்றியவர். நீதிபதி ஆதிகேசவலு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து, 1994-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். தந்தையிடம் சில காலம் ஜூனியராக பணியாற்றிய இவர், பின்னர் தனியாக வழக்குகளில் ஆஜராகி வந்தார்.
புதிதாக 6 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் 21 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.