

சென்னை அயனாவரம் அரசு போக்குவரத்து பணி மனை உணவகத்தில் பிளாஸ்டிக் அரிசியால் சமைக்கப்பட்ட சாப்பாடு விநியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து அங்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் கடந்த 7-ம் தேதி பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், “தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு இல்லாததால் பிளாஸ்டிக் அரிசி உள்ளே நுழைய வாய்ப்பில்லை. ஆனால், தமிழகத்தில் எங்கேனும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை அயனாவரம் அரசு போக்குவரத்து பணிமனை உணவகத்தில் பிளாஸ்டிக் அரிசியை சமைத்து சாப்பாடு விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணிமனை உணவகத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பணிமனை உணவகத்தில் இருந்த அரிசி மூட்டைகளை சோதனையிட்டதில் அதில் பிளாஸ்டிக் அரிசி இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. எனினும், வேதியியல் சோதனைக்காக கிண்டியில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அரிசி மாதிரிகளை அனுப்பியுள்ளோம்” என்றார்.