காவிரி நீர் பிரச்சினை: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

காவிரி நீர் பிரச்சினை: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
Updated on
2 min read

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி, தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு இன்னும் திறக்காததால், உச்ச நீதிமன்றத்தில் ஓரிரு நாளில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட சட்டப்போரின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற உத்தரவின்படி, காவிரி நடுவர் மன்ற ஆணையை மத்திய அரசு 2013 பிப்ரவரி 19-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டது. எனினும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு இன்னும் அமைக்காததால் காவிரி நீரில் நமக்குரிய பங்கை கர்நாடக அரசு விடுவிப்பதில்லை. எனவே, இந்த அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 2013-ம் ஆண்டிலேயே தமிழக அரசு மனுக்கள் தாக்கல் செய்து அவை நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில், நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுகளை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது. இதில் காவிரி வழக்கும் ஒன்று. உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன்பு காவிரி வழக்குகள் கடந்த மார்ச் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்குகளை ஜூலை 19-ம் தேதி பட்டியலிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அக்டோபர் 18-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்ற ஆணைப்படி, ஜூன் முதல் மே மாதம் வரையிலான காலம்தான் ஒரு பாசன ஆண்டு ஆகும். நடப்பு பாசன ஆண்டின் ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி நீரை விடுவிக்க வில்லை. இதனால், கர்நாடக, மத்திய அரசுகளுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கடந்த ஜூலை 30-ம் தேதி கடிதம் அனுப்பினார். ‘‘கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 27 வரை ஏற்பட்ட குறைபாட்டு அளவான 22.934 டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும். இனி வரும் மாதங் களிலும் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி, நீரை விடுவிக்க வேண்டும்’’ என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும், கர்நாடக அரசு, மத்திய அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை

கர்நாடகாவில் ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 பெரிய நீர்த் தேக்கங் களின் மொத்த கொள்ளளவு 114.571 டிஎம்சி. இவற்றில் கடந்த 17-ம் தேதி நிலவரப்படி 64.849 டிஎம்சி நீர் உள்ளது. இந்த 4 அணைகளில் இருந்தும் கர்நாடகாவின் பாசனத்துக்காக நீர் தொடர்ந்து திறக்கப்படுகிறது. அதே நேரம், மேட்டூர் அணையில் 17-ம் தேதி நிலவரப்படி 27.560 டிஎம்சி நீர்தான் உள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி, தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறக்காததால், உச்ச நீதிமன்றத்தில் விரைவில் இடைக்கால மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். இது ஓரிரு நாளில் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு, உச்ச நீதிமன்றம் மூலம் உரிய ஆணைகள் பெறப்பட்டு, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி நமக்கு உரிய பங்கைப் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கூடுவாஞ்சேரியில் புதிய புறநகர் பேருந்து நிலையம்

சென்னை வண்டலூருக்குப் பதிலாக நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்துக்கு உரிமை மாற்றும் பணி நடைபெற்று வருவதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

தமிழகத்தின் தென் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக சென்னை வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த 30-4-2013ல் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதை செயல்படுத்த ஜி.எஸ்.டி. மற்றும் வெளிவட்டச் சாலையை ஒட்டியுள்ள நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்குப் பதிலாக நந்திவரம் - கூடுவாஞ்சேரி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம், அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உரிமை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து முனையத்தின் நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை மாதவரம் பேருந்து மற்றும் சரக்குந்து வளாகத்தில் சுமார் 8 ஏக்கரில் துணை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 24 மாதங்களில் இப்பணி நிறைவுபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in